அமெரிக்கா நடத்திய வரி யுத்தத்தால்.. இந்தியாவுக்கு அடிக்கும் பெரிய ஜாக்பாட்! சீனாவின் பிளானை பாருங்க
பீஜிங்: அமெரிக்கா - சீனா இடையேயான வரியுத்தம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இந்தியா பக்கம் சீனா திரும்பியுள்ளது. வர்த்தக பற்றாக்குறையை போக்கும் விதமாக இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க சீனா முன்வந்துள்ளது. சீன சந்தைகளில் இந்திய பொருட்களுக்கான கதவுகள் அதிகம் திறக்கப்பட்டால் இந்தியாவுக்கு பெரும் லாபகரமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் அளவிற்கு அதே வரியை, வரி விதிக்கும் நாடுகள் மீதும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதன்படி, கடந்த 9 ஆம் தேதி பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இந்தியா மீதும் 26 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தார்.

ஏற்றுமதியை தடை செய்த சீனா
வல்லரசு நாடான அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. பல்வேறு நாடுகளும் வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக 90 நாட்களுக்கு வரி விதிப்பை நிறுத்தி வைத்து இருக்கிறார். எனினும், சீனா மீது மட்டும் விதிக்கப்பட்ட வரி விதிப்பை நிறுத்தி வைக்கவில்லை. மாறாக வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
இதற்கு காரணம், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்தே ஆகும். இப்போது சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை கடந்த 19 ஆம் தேதி அமரிக்கா வெளியிட்டது. கார், செமி கண்டக்டர் எனப்படும் குறைக்கடத்தி மற்றும் விண்வெளித் தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் சில அரிய வகை தனிமங்கள் மற்றும் கனிமங்களின் ஏற்றுமதியை சீனா தடை செய்தது. இதனால் கடுப்பான டிரம்ப் இப்படி வரியை விதித்து இருக்கிறார்.
இந்தியாவின் பக்கம் திரும்பும் சீனா
அமெரிக்கா தற்போது ஏகத்திற்கும் வரியை விதித்து இருக்க கூடிய நிலையில், சீனா இந்தியாவின் பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. அதாவது, இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார் எனவும், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை போக்கும் வகையில், சீன சந்தைக்குள் இந்திய பொருட்களை இறக்கி இந்திய தொழில்களுக்கு உதவ தயாராக உள்ளதையும் இந்தியாவுக்கான சீனா தூதர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீன தூதர் ஷூ பெய்ஹாங் கூறியதாவது:- "சீனா - இந்தியா பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் இரு தரப்பிற்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்ற சாராம்சத்தை கொண்டதாகவும், சீனா ஒருபோதும் வர்த்தக உபரி நிலையை வேண்டும் என்றே உருவாக்கியது இல்லை. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா முதலீடு மற்றும் நுகர்வுக்கு அதிக சாத்தியங்களை கொண்ட நாடு என்று ஜி ஜின்பிங் அண்மையில் கூறினார்.
நாங்கள் வரவேற்கிறோம்
சீனாவின் மிகப்பெரிய சந்தை மதிப்பு, இந்திய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் வர்த்தக வாய்ப்பை கொடுக்கும். 2024 நிதி ஆண்டில் இந்திய பொருட்களான மிளகாய், மிளகு, இரும்பு தாதுக்கள், காட்டன் பொருட்கள் உள்ளிட்டவை சீனாவுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை முறையே, 17, 160, 240 சதவீதங்கள் அதிகரித்தன. இந்தியாவின் முன்னணி பொருட்கள் அதிக அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், சீனாவின் கவலைகளை இந்தியா கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். அதாவது, நியாயமான வெளிப்படத்தன்மை கொண்ட பாரபட்சம் இல்லாத வணிக சூழலை சீன நிறுவனங்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று சீனாவின் கவலைகளை இந்தியா கவனத்தில் கொள்ளும் என்று நம்புகிறோம். சீன நிறுவனங்களுக்கு பாரபட்சம் இல்லாத வணிக சூழலை உருவாக்குவது, சீன - இந்தியா இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு எடுத்து செல்லும். மேலும் இரு நாட்டு மக்களுக்கும் உறுதியான நன்மைகளை வழங்கும்" இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பு?
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதனால், வரி பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனா தனது போக்கில் இருந்து கொஞ்சம் இறங்கி வந்துள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா வணிகத்துறை முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வாமக அமையுமா? சீனாவின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்குமா இல்லை அமெரிக்காவின் கோரிக்கைக்கு சீனா செவி சாய்க்குமா? என்பது எல்லாம் தெரியவில்லை.
எனவே, அமெரிக்காவுடன் மல்லுக்கட்டி கொண்டு நிற்கும் இந்த நேரத்தில், இந்தியாவில் வர்த்தக உறவை மேம்படுத்த சீனா ஆர்வம் காட்டுவது இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக பற்றாக்குறை குறைந்துவிட்ட நிலையில் சீனாவுடன் அதிகமாக உள்ளது. ஏனெனில் சீனாவிடமிருந்து நாம் அதிகம் இறக்குமதி செய்கிறோம். ஏற்றுமதி குறைவாக இருந்தது.
தற்போது, சீன சந்தைகளில் உள்ள பெரும் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கான உகந்த சூழல், அமெரிக்கா நடத்தும் வரியுத்தம் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், சீனாவுக்கு இந்தியா அதிக அளவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் வர்த்தக பற்றாக்குறை குறையும். இது இந்தியாவுக்கு பலனளிக்க கூடியதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications