அமெரிக்காவில் உள்ள வங்கியில் துப்பாக்கி சூடு.. 5 பேர் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் கென்டகி மாகாணத்தில் இருக்கும் லூயிஸ்வில் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியானார்கள். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
வங்கி ஒன்றில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. வங்கியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. போலீசார் இங்கே நடத்திய பதில் தாக்குதலில் அவரும் மரணம் அடைந்துவிட்டார் என்று முதலில் நம்பப்பட்டது. ஆனால் அதற்கு முன் குற்றவாளி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

அமெரிக்க போலீசாருக்கு காலை 8.30 மணிக்கு இந்த துப்பாக்கி சூடு பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட லூயிஸ்வில் வங்கிக்கு உடனடியாக போலீசார் சென்றனர். அங்கே உடனே துப்பாக்கிகளுடன் உள்ளே சென்று தாக்குதல் நடத்த முயன்று உள்ளனர். அங்கே குற்றவாளிக்கும் - போலீசாருக்கும் இடையில் சரமாரி துப்பாக்கி சண்டை நடந்து உள்ளது.
போலீசார் குற்றவாளியை சுடும் முன் குற்றவாளி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். மொத்தம் 5 பேர் இந்த துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டனர். 8 பேர் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 8 பேரில் 2 பேர் மிக மோசமான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.
அங்கே வேலை பார்த்து, வேலையில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தால் முன்னாள் ஊழியர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வங்கியின் லாக்கரில் துப்பாக்கி சூட்டின் போது ஒளிந்து கொண்ட சிலர்தான் போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அங்கு துப்பாக்கிகளை கட்டுப்படுத்தும் விதிகளை கொண்டு வர வேண்டும் என்று தீவிர கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications