ரத்த புற்றுநோயை குணப்படுத்த மருந்து கிடைச்சாச்சு! ஜான்சன் & ஜான்சன்ஸ் அசத்தல்! அமெரிக்கா ஒப்புதல்
நியூயார்க்: ரத்த புற்றுநோயை குணப்படுத்த ஜான்சன் & ஜான்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய மருந்துக்கு அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
பெரு நகரங்களின் வளர்ச்சி, மேம்பட்ட வாழ்வாதாரம், நவீனமயம் என மனிதர்கள் புதிய இலக்கை எட்டினாலும், இதனால் ஏற்படும் சில பின் விளைவுகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதில் மிக முக்கியமானது புற்றுநோய். இதில் பல வகைகள் இருந்தாலும் அவற்றை தொடக்கத்தில் கண்டுபிடித்துவிட்டால் காப்பாற்றிவிடலாம். ஆனால் ரத்த புற்றுநோயிலிருந்து மனிதர்களை காப்பாற்றுவது என்பது சவாலான விஷயமாக இருக்கிறது.

இந்த நோய் உருவாவதற்கு இரண்டு காரணங்கள்தான் சொல்லப்படுகிறது. ஒன்று பரம்பரை வழியில் வருவது. மற்றொன்று மாறிவரும் இயற்கை சூழலால் வருவது. இன்னும் சரியாக சொல்வதெனில் அதிக கதிரியக்க வெளிப்பாடு இருக்கும் இடங்களில் வேலை பார்ப்பவர்கள், ஏற்கெனவே புற்றுநோய்க்காக கீமோதெரபி போன்ற சிகிச்சையை எடுத்துக்கொண்டவர்கள், புகைப்பிடிப்பவர்கள் ஆகியோருக்கு இந்த பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது.
சர்வதேச அளவில் மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்நாட்டில் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஏதேனும் ஒருவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கும் ஒருவர் இந்த நோய் காரணமாக உயிரிழக்கின்றார். எனவே இதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் ஆய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்தான் ஜான்சன் & ஜான்சன்ஸ் நிறுவனம் இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய மருந்தை கண்டுபிடித்திருக்கிறது.

டால்வி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து பிஸ்பெசிஃபிக் ஆன்டிபாடி வகை மருந்தாகும். இதனை 6-8 மாதங்கள் வரை எடுத்துக்கொண்டால் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீளலாம். ஆனால் இதன் விலைதான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதாவது ஒரு மாதத்திற்கான மருந்துக்கு ரூ.37.24 லட்சம் செலவாகும். அப்படியெனில் 8 மாதங்களுக்கு ரூ.2.9 கோடி ஆகும். இந்த மருந்துக்கு அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகமான எஃப்டிஏ அனுமதி வழங்கியிருக்கிறது.
இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த மருந்து விற்பனைக்கு வரலாம் என்று ஜான்சன் & ஜான்சன்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. நோயாளியின் உடல் எடை, வயது, நோயின் வீிரியம் ஆகியவற்றை பொறுத்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு ஒன்று என இந்த ஊசி செலுத்திக்கொள்ளலாம். இது தோலுக்கு அடியில் செலுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை பயன்படுத்தப்பட்டதில் 73.6% பேருக்கு இந்த ஊசியின் மூலம் புற்று நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications