நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

64 ஆண்டு மர்மம்..! காருடன் திடீரென மாயமான குடும்பம்.. உலகையே பீதியில் ஆழ்த்திய 'மார்ட்டின் கேஸ்'

Google Oneindia Tamil News

நியூயார்க்: 64 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் திடீரென ஒரு குடும்பம் காருடன் மாயமானதும், அந்தக் குடும்பம் குறித்து இன்று வரை எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்., இன்றைய தேதி வரை இந்த வழக்கு அமெரிக்க போலீஸாருக்கு மட்டுமல்லாமல் அந்நாட்டு உளவு அமைப்புகளுக்கே பெரும் மர்மமான வழக்காக உள்ளது. மேலும், பலர் இது அமானுஷ்யம் நிறைந்த வழக்கு என்றும் கூறுகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை ஒவ்வொரு ஆண்டும் போலீஸார் தூசு தட்டி விசாரிப்பதும், பின்னர் தடயம் ஏதும் கிடைக்காமல் அதே இடத்தில் அதை வைத்து விடுவதும் தொடர்கதையாகி உள்ளது. அமெரிக்க போலீஸாரையே பீதியில் ஆழ்த்தும் அளவுக்கு அந்த வழக்கில் என்னதான் இருக்கிறது? நாமும் பார்க்கலாம்.

'காதல்' பட பாணியில் பயங்கரம்.. காதலனை பஸ் முன் தள்ளிவிட்ட காதலியின் குடும்பம்.. கதறிய பெண்! 'காதல்' பட பாணியில் பயங்கரம்.. காதலனை பஸ் முன் தள்ளிவிட்ட காதலியின் குடும்பம்.. கதறிய பெண்!

 கிறிஸ்துமஸ் பார்ட்டி..

கிறிஸ்துமஸ் பார்ட்டி..

அது 1958, டிசம்பர் 6-ம் தேதி இரவு. அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரைச் சேர்ந்த கென்னத் மார்ட்டினின் (54) குடும்பத்தினர் அனைவரையும் போல கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கென்னத் மார்ட்டின் அங்குள்ள எலக்ட்ரிக் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அன்றைய தினம் தனது மனைவி பார்பரா மார்ட்டின் (48) மற்றும் மூன்று மகள்களான பார்பி (14), விர்ஜினியா (13), சூசன் (11) ஆகியோருடன் போர்ட்லேண்ட் நகரில் நடைபெற்ற ஒரு கிறிஸ்துமஸ் பார்ட்டியில் கென்னத் மார்ட்டின் கலந்து கொண்டார். கென்னத் மார்ட்டினின் மூத்த மகனானடொனால்ட் மார்ட்டின், அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்து வந்தார். நியூயார்க்கில் அவருக்கு வேலை.

 அதுதான் கடைசி நாள்..

அதுதான் கடைசி நாள்..

கிறிஸ்துமஸ் பார்ட்டி முடிந்து நள்ளிரவு கென்னத் மார்ட்டின் குடும்பத்தினர் வீடு திரும்பினர். அப்போது தங்கள் வீட்டிலும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அதற்கு அடுத்த தினமான டிசம்பர் 7-ம் தேதி காலையில், அவர்கள் தங்கள் சிகப்பு நிற 'ஃபோர்டு' காரை எடுத்துக்கொண்டு பார்ட்டிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடை வீதிக்கு சென்றனர். அவ்வளவுதான்.. அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவே இல்லை. இதனிடையே, டிசம்பர் 9-ம் தேதி கென்னத் மார்ட்டின் அலுவலகத்துக்கு வராததால், அவரது சக ஊழியர்கள் அவர் வீட்டுக்கு போன் செய்தனர். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அன்றைய தினம் இரவு கென்னத் மார்ட்டினின் வீட்டுக்கு வந்த போலீஸார், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக எதுவுமே இல்லை. ஒரு குடும்பத்தினர் வெளியே சென்று விட்டு உடனே திரும்ப வேண்டுமானால், அந்த வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் கென்னத் மார்ட்டினின் வீடும் இருந்தது. அவரது வங்கிக் கணக்கை சோதனை செய்த போது அதில் கணிசமாக பணமும் இருந்தது. இதனை பார்த்த போலீஸார், அவர்கள் ஏதேனும் பொருட்களை வாங்க கடைவீதிக்குதான் சென்றிருக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி, அடுத்த நாள் கடைவீதிக்கு சென்று போலீஸார் விசாரித்த போது, மார்ட்டின் குடும்பத்தினர் அங்குள்ள ஒரு கடையில் கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு தேவையான பொருட்களை வாங்கியது தெரியவந்தது. பின்னர் அவர்கள், கிழக்கு திசையை நோக்கி சென்றதாக கடைக்காரர் கூறியதன் பேரில், போலீஸாரும் அந்த இடத்துக்கு சென்றனர். செல்லும் வழி எல்லாம் அங்குள்ள கடைக்காரர்களிடம் போலீஸார், மார்ட்டின் குடும்பத்தினர் குறித்து விசாரித்தபடியே சென்றனர்.

 ரெஸ்ட்டாரண்ட்டும்.. முதல் க்ளூவும்..

ரெஸ்ட்டாரண்ட்டும்.. முதல் க்ளூவும்..

அப்போது அங்குள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் மார்ட்டின் குடும்பத்தினர் மதிய உணவு சாப்பிட்டதாக அங்கு வேலை செய்யும் சர்வர் ஒருவர் கூறினார். இந்த ரெஸ்டாரண்ட், கென்னத் மார்ட்டின் வீட்டில் இருந்து 90 கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்துள்ளது. மேலும், மார்ட்டின் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் இரண்டு பேர், ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் அந்த சர்வர் கூறினார். இதுவரை எந்த துப்புமே கிடைக்காமல் இருந்த இந்த வழக்கில், சர்வர் கூறிய தகவல்தான் போலீஸாருக்கு கிடைத்த முதல் க்ளூவாக இருந்தது. இதன்பேரில், அந்த இரண்டு ரவுடிகளை போலீஸார் தேடிக் கொண்டிருந்தனர். அதே வேளையில், ஒரு மாதம் கழித்து அந்த ரெஸ்டாரண்ட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் ஒரு ரத்தக்கறை படித்த கைத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். பணத்துக்காக அந்த இரண்டு ரவுடிகளும்தான், கென்னத் மார்ட்டின் குடும்பத்தினரை கொலை செய்திருக்கிறார்கள் என போலீஸார் முடிவு செய்தனர். ஆனால் போலீஸாரின் கணிப்பு தவறு என்பது சில நாட்களில் தெரியவந்தது. அந்த இரண்டு ரவுடிகளை அடுத்த சில தினங்களில் பிடித்து விசாரித்த போது, அவர்கள் மார்ட்டின் குடும்பத்தினரை கொலை செய்யவில்லை என்பதையும், அன்றைய தினம் அவர்கள் வேறொரு இடத்தில் இருந்ததையும் போலீஸார் உறுதி செய்தனர். போலீஸார் கைப்பற்றிய துப்பாக்கியிலும் அவர்களின் கைரேகை இல்லை.

 துப்பாக்கியும்.. டொனால்டு மார்ட்டினும்..

துப்பாக்கியும்.. டொனால்டு மார்ட்டினும்..

அதன் பின்னர், போலீஸாரின் கவனம் முழுவதும் அந்த துப்பாக்கியின் மீது விழுந்தது. அதில் உள்ள சீரியல் எண்களை கொண்டு விசாரித்ததில், போர்ட்லேண்டில் உள்ள ஒரு கடையில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த துப்பாக்கி திருடுப்போனது தெரியவந்தது. அந்த துப்பாக்கியை திருடியவனின் பெயரை கேட்டதும் போலீஸார் அதிர்ந்துவிட்டனர். ஏன் தெரியுமா..? அவர்கள் கூறிய பெயர் "டொனால்ட் மார்ட்டின்". நினைவிருக்கிறதா? கென்னத் மார்ட்டினின் மூத்த மகன் டொனால்ட் மார்ட்டின்தான் அது. கிட்டத்தட்ட இந்த வழக்கு முடிந்துவிட்டதாகவே போலீஸார் கருதினர். டொனால்ட் மார்ட்டின், தனது தந்தையின் சொத்து முழுவதையும் அடைய வேண்டும் என்பதற்காக தன் குடும்பத்தையே கொலை செய்திருக்கிறார் என போலீஸார் முடிவுக்கு வந்தனர். ஆனால் மீண்டும் போலீஸாரின் கணிப்பு பொய்த்து போனது. ஏனெனில், நியூயார்க்கில் பணிபுரிந்து வரும் டொனால்டு மார்ட்டின் கடந்த 6 மாதங்களாக விடுப்பு இல்லாமல் பணிபுரிந்து வந்திருக்கிறான் என போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, மீண்டும் மார்ட்டின் குடும்பத்தை தேடி போலீஸார் அலையத் தொடங்கினர். வழக்கம் போல எந்த க்ளூவும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.

 ஆற்றில் மிதந்த உடல்கள்...

ஆற்றில் மிதந்த உடல்கள்...

இந்நிலையில் தான், ஆறு மாதங்கள் கழித்து அதாவது 1959-ம் ஆண்டு மே மாதம் கேமாஸ் என்ற நகரில் உள்ள கொலம்பியா ஆற்றில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று பார்த்த போது, அவை அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிப் போயிருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த உடலை பிரேதப் பரிசோதனை செய்து பார்த்ததில் அது கென்னத் மார்ட்டினின் மகள்களான சூசன் மற்றும் விர்ஜினியா என்பது தெரியவந்தது. அதே சமயம், அவர்களின் உடல்களில் காயங்கள் ஏதும் இல்லை. தண்ணீரில் மூழ்கியதால் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மார்ட்டின் குடும்பம் சாப்பிட்ட ரெஸ்டாரண்ட்டில் இருந்து 150 கி.மீ. தொலைவுக்கு அப்பால் அவர்களின் உடல்கள் எப்படி வந்தன என தெரியாமல் போலீஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மீண்டும் மர்மம் துரத்தியது.
மாயமான காரும், மார்ட்டின் குடும்பத்தினரும்

ஆனால் இப்போது போலீஸார் மற்றொரு முடிவுக்கு வருகின்றனர். அதாவது, "கென்னத் மார்ட்டின் குடும்பத்தினரை யாரும் கொலை செய்யவில்லை. அவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளாகி, ஆற்றில் கவிழ்ந்திருக்கிறது" என போலீஸார் கேஸை முடிக்க தயாராகினர். இதைத் தொடர்ந்து அடுத்த நாள், கொலம்பியா ஆற்றில் கென்னத் மார்ட்டினின் காரை தேடும் பணிகள் நடைபெற்றன. ஆனால் எவ்வளவு தேடியும் கார் கிடைக்கவில்லை. பின்னர் ஆற்று நீரை 4 அடி உயரத்துக்கு குறைத்தும், சோனார் டெக்னாலஜி எனப்படும் தண்ணீருக்குள் பொருட்களை கண்டுபிடிக்கும் முறையிலும் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களின் கார் மட்டும் அங்கு இல்லை. இது எப்படி சாத்தியம் என போலீஸார் விழிப்பிதுங்கி நின்றனர்.

ஆற்றில் கார் அடித்து செல்லப்பட வாய்ப்பில்லை. அப்படியே அடித்து செல்லப்பட்டிருந்தாலும், அருகில் இருக்கும் அணையை விட்டு அது வெளியே சென்றிருக்க முடியாது. அப்படியிருக்கும் போது, அந்த கார் எங்கே போயிருக்கும்? சூசன் மற்றும் விர்ஜினியாவின் உடல்கள் மட்டும் எப்படி இந்த ஆற்றுக்கு வந்தன? என ஏராளமான கேள்விகள் போலீஸாரை துளைத்து எடுத்தன. ஆனால் எந்தக் கேள்விக்கு பதில் மட்டும் இல்லை. இப்போது வரை அந்த காரையும் கண்டுபிடிக்கவில்லை. காருடன் காணாமல் போன கென்னத் மார்ட்டின், அவரது மனைவி பார்பரா மற்றும் அவர்களின் மூத்த மகள் பார்பி ஆகியோரையும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 கிடைத்தது தடயங்களா.. மர்மங்களா..?

கிடைத்தது தடயங்களா.. மர்மங்களா..?

இப்போது வரை கென்னத் மார்ட்டின் குடும்பம் காணாமல் போன வழக்கு மிகப்பெரிய மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கில் முதலில் தடயங்களை போல கிடைத்த சில விஷயங்கள், மேலும் சிக்கலை ஏற்படுத்தியதோடு, பல மர்மமான கேள்விகளையும் முன்வைக்கின்றன. உதாரணத்துக்கு, மார்ட்டின் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு சென்ற ரெஸ்டாரண்ட்டுக்கு அருகே ரத்தக்கறை படித்த துப்பாக்கி எப்படி வந்தது? அப்படியே வந்தாலும், மிகச்சரியாக கென்னத் மார்ட்டினின் மகன் டொனால்டு சிறு வயதில் திருடிய துப்பாக்கியாக அது ஏன் இருக்க வேண்டும்? இப்படி ஏராளமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. கென்னத் மார்ட்டின் தனது குடும்பத்தினருடன் வேறு எங்கேயாவது சென்றிருக்கலாம் என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. ஏனெனில், அமெரிக்காவில் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு சென்றாலே அந்த வாகனங்களின் எண்கள் நெடுஞ்சாலை போலீஸாரால் பதிவு செய்யப்படும். அப்படியே அவர்கள் யாருக்கும் தெரியாமல் எங்காவது சென்றுவிட்டார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களின் இரண்டு மகள்கள் மட்டும் எப்படி ஆற்றில் மூழ்கி இறந்து போனார்கள்? இப்படி ஏராளமான கேள்விகளுக்கு இப்போது வரை விடை கிடைக்காமல் அமெரிக்கா போலீஸாரும், உளவு அமைப்புகளும் திணறி வருகின்றன.

 டைரியில் இருந்த அந்தப் 'பெயர்'

டைரியில் இருந்த அந்தப் 'பெயர்'

இது எல்லாவற்றுக்கும் மேலாக, மார்ட்டினின் மூத்த மகன் டொனால்ட், இந்த சம்பவம் நடந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்து தனது தந்தையின் சொத்துகளை எல்லாம் சட்டப்பூர்வமாக தனது பெயருக்கு மாற்றிக்கொண்டு வேறு ஊருக்கு சென்று குடிபெயர்ந்துவிட்டார். இந்த வழக்கில் போலீஸாருக்கு பிரபல டிடெக்டிவ் நிபுணர் வால்டர் என்பவர் உதவியாக இருந்தார். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளிலேயே அவரால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு இந்த மார்ட்டின் வழக்கு மட்டுமே. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், 1990-களில் இறந்தும் போனார். அதன் பின்னர், அவர் தனது கடைசி காலத்தில் பயன்படுத்திய பொருட்களை அவரது குடும்பத்தினர் எடுத்து பார்த்த போது, ஒரு டைரியில் ஏதோ ஒரு பெயரை மீண்டும் மீண்டும் எழுதி அதை அவர் அடித்து வைத்திருந்தார். ஆனால் அவர் என்ன பெயரை எழுதினார் எனத் தெரியவில்லை. பின்னர் கம்ப்யூட்டர் உதவியுடன் ஆராயப்பட்ட பிறகே அவர் எழுதி வைத்திருந்த பெயர் தெரியவந்தது. அந்தப் பெயர் 'டொனால்ட் மார்ட்டின்.' ஆனால் இந்த வழக்குக்கும், டொனால்ட் மார்ட்டினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் போலீஸ் அறிக்கை கூறுகிறது. எது எப்படியோ, மாயமான அந்தக் கார் கிடைத்தால் மட்டுமே மார்ட்டின் குடும்பத்தை சுற்றி வரும் இந்த மர்மங்களுக்கு எல்லாம் விடை கிடைக்கும்.

English summary
The Martin family which lived in Portland, Oregon, United States, suddenly disappeared on December 7, 1958 with their car. Police has no clue what happened to the family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X