டிரம்பிற்கும் விழும் அடி.. அமெரிக்காவை அலறவிடும் நேட்டோ.. F 35 ரக போர் விமானங்களால் வைக்கும் ஆப்பு
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அவர் பல நாடுகளையும் அலறவிட்டு வருகிறார். எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என்று அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அந்த நாட்டின் எஃப் 35 ரக போர் விமானங்கள் மூலம் அடி கொடுக்க நேட்டோ நாடுகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அன்று முதல் டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கூடுதல் வரி விதிப்பு, அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பது மற்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றுதல் என்று தொடர்ந்து அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கை என்பது பாராட்சமின்றி உள்ளது. அதாவது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும் சரி, எதிரி நாடாக இருந்தாலும் கூட அனைத்து நாடுகளையும் ஒரே கண்ணில் பார்க்கிறார். அதாவது எதிரி நாட்டின் மீதும், நட்பு நாடுகள் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
இதனால் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா முக்கிய பங்காற்றும் நேட்டோ படையில் உள்ள நாடுகளும் பாதிப்பை சந்திக்க தொடங்க உள்ளன. நேட்டோ என்பது கடந்த 2ம் உலகப்போருக்கு பிறகு அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த நேட்டோவில் மொத்தம் 32 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் 30 நாடுகள் ஐரோப்பாவை சேர்ந்தவை. 2 அமெரிக்க கண்டத்தை சேர்ந்தவையாகும். அதாவது இந்த அமைப்பின் நோக்கம் என்பது ஐரோப்பிய- அமெரிக்க பிராந்தியத்தில் அமைதியை உருவாக்குவதாகும்.
அதுமட்டுமின்றி நேட்டோவில் உள்ள நாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட வீரர்களை நேட்டோ படைக்கு என்று அனுப்பி இருக்கும். இதனால் 32 நாடுகளின் வீரர்களின் கூட்டணியில் மிகப்பெரிய படையாக நேட்டோ படை உள்ளது. இந்த நேட்டோ அமைப்பில் உள்ள நாட்டுக்கு எதிராக யார் தாக்கினாலும் அல்லது போர் நடவடிக்கையை மேற்கொண்டாலும் நேட்டோ நாடுகள் அனைத்தும் சேர்ந்து பதிலடி கொடுக்கும். தற்போது நேட்டோவில் அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, ஸ்வீடன், ஸ்பெயின், ஸ்லோவேனியா, ஸ்லோவேகியா, ரோமானியா, போர்ச்சுக்கல், போலந்து, நார்வோ, வடக்கு மசிடோனியா, நெதர்லாந்து, மொன்டென்னிரோ, லக்சம்பர்க், லிதுவேனியா, லடிவா, இத்தாலி, ஐஸ்லாந்து, ஹங்கேரி, கிரீஸ், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, எஸ்டோனியா, டென்மார்க் செக் குடியரசு, குரோஷியா, கனடா, பல்கேரியா, பெல்சியம், அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இதில் நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்காவை விலக்குவதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். மேலும் நேட்டோ நாடுகள், நெருங்கிய நட்பு நாடுகள் என்று கூட பார்க்காமல் கனடாவுக்கு கூடுதல் வரியை விதித்துள்ளார் டிரம்ப். அதேபோல் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கூடுதல் வரியை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகளுக்கு வரி விதிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் டொனால்ட் டிரம்ப். இப்படியான சூழலில்தான் நேட்டோ நாடுகள் சார்பில் டொனால்ட் டிரம்ப்புக்கு செக் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்கா எஃப் 35 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்கள் என்பது 5ம் தலைமுறையை சேர்ந்தது. இந்த விமானங்களை அமெரிக்கா நேட்டோ நாடுகள் உள்பட 19 நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அமெரிக்காவை தவிர்த்து பார்த்தால் அந்த நாடு மொத்தம் 18 நாடுகளுக்கு எஃப்35 ரக போர் விமானங்களை விற்பனை செய்துள்ளது.
பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, போலந்து, ரோமானியா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளும், நேட்டோவில் இல்லாத ஜப்பான்,ஆஸ்திரேலியா, தென்கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் எஃப் 35 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இப்படியான சூழலில் தான் சில நாடுகள் தங்களின் பயன்பாட்டில் உள்ள 4, 4.5ம் தலைமுறையை சேர்ந்த பழைய ரக விமானங்களை மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த விமானங்களுக்கு மாற்றாக எஃப் 35 ரக போர் விமானங்களை வாங்கி பயன்படுத்த நேட்டோ நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆனால் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கையால் அந்த விமானங்களை வாங்குவதில் மறுபரிசீலனை செய்ய நேட்டோ நாடுகள் முடிவு செய்துள்ளன.
இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் கனடாவும், அமெரிக்காவும் அண்டை நாடுகள். இருநாடுகளும் நேட்டோவில் உள்ளன. ஆனால் டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார். அதுமட்டுமின்றி கனடாவுக்கு அதிக வரி விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடா சார்பில் அமெரிக்காவிடம் இருந்து 88 எஃப் 35 எஸ் ரக விமானங்களை 13 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. தற்போதைய மோதல் காரணமாக இதனை மறுபரிசீலனை செய்ய கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அதேபோல் போர்ச்சுகல் நாடு நேட்டோ அமைப்பில் உள்ளது. இந்த நாட்டில் தற்போது அமெரிக்காவின் எஃப் 16 எஸ் ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த விமானங்களுக்கு பதில் எஃப் 35 ரக லைட்னிங் II போர் விமானங்களை வாங்கி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய மோதல் காரணமாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக போர்ச்சுக்கல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதவிர நேட்டோவில் உள்ள மற்றொரு நாடு ஜெர்மனி. இந்த நாடு அமெரிக்காவிடம் 35 எஃப் 35 ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் தற்போது அந்த நாடும் கூட அதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படியாக 3 நேட்டோ நாடுகள் எப்ஃ35 ரக போர் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதை நிறுத்தும் பட்சத்தில் பிற நேட்டோ நாடுகளும் இதனை கையில் எடுக்கலாம். அது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கும், அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் பெரும் அடி விழலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications