குழந்தை பிறப்பு சிக்கலுக்கு தலையும், இடுப்பு எலும்பும்தான் காரணமா? மறுக்கும் ஆய்வாளர்கள்
நியூயார்க்: மனிதர்களை தவிர வேறு எந்த உயிரினங்களும் பிரசவத்திற்கு மருத்துவமனையை நாடுவதில்லை. ஏன் மனிதர்கள் மட்டும் மருத்துவ உதவியை நாடுகிறார்கள் என்று பல காலமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. இதற்கு இடுப்பும், குழந்தையின் தலையும்தான் காரணம் என்று ஆய்வாளர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். ஆனால், இந்த இரண்டு விஷயம் மட்டுமே குழந்தை பிறப்பை சிக்கலாக்குவதில்லை என்று ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
உலகத்தில் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. நீலத்திமிங்கலம் தொடங்கி, நின்றுக்கொண்டே தூங்கும் குதிரை வரை எல்லா உயிர்களும் பிரசவிக்கின்றன. ஆனால் இவை எவற்றுக்கும் பிரசவத்தின்போது மருத்துவ வசதி தேவைப்படுவதில்லை. பின் ஏன் மனிதர்கள் மட்டும் மருத்துவர்களை நாடுகிறார்கள்? என பழமைவாதிகள் காலங்காலமாக கேள்வி எழுப்பி வந்தனர். இந்த கேள்வியின் பின்னால் வீட்டு பிரசவம் எனும் முறை ஊக்குவிக்கப்பட்டு வந்தது என்பது தனிக்கதை. இந்த கேள்விக்கு நவீன மருத்துவம் தனது செயல்முறையில் பதில் அளித்தது.

அதாவது, மருத்துவ உதவியுடன் பிரசவிக்கும்போது தாய்-சேய் இறப்பு விகிதம், கணிசமாக குறைந்துள்ளது. எனவே, மனித குல வளர்ச்சிக்கு மருத்துவம் பயன்படுகிறது என்பது பிரசவத்தின் போதும் கூட நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக மருத்துவம் மூடநம்பிக்கைகளை உடைத்திருந்தாலும், ஏன் மனித குழந்தைகளின் பிறப்பு மட்டும் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது? என்கிற கேள்வியை எழுப்ப காரணமாக அமைந்துவிட்டது. இதற்கும் இதே நவீன மருத்துவம் ஆய்வு செய்து பதில் சொல்லியிருந்தது.
உலகில் பல உயிரினங்கள் பரிணாமமடைந்துள்ளன. ஆனால், மனிதர்கள் மட்டும்தான் அறிவு ரீதியாக பரிணாமமடைந்துதான் அதிகம். எனவே, மூளையின் பயன்பாடு கூடுதலாக இருக்கிறது. இது தலையின் சைஸை பெரிதுப்படுத்தியிருக்கிறது. வளர்ந்து அறிவு பெற்ற மனிதர்களின் தலையின் சைஸைவிட, பிறந்த குழந்தையின் மண்டை சைஸ் சிறியதாகவே இருக்கும்.
மற்ற உயிர்களை போல, மனித குழந்தைகள் பிறந்தவுடன் தானாக எழுந்து நடக்க வேண்டும் எனில், அதன் மூளை ஓரளவு வளர்ந்திருக்க வேண்டும். அப்படி நடந்தால் தலையின் சைஸ் பெரியதாகிவிடும். இவ்வளவு பெரிய தலையை கொண்ட குழந்தை தாயின் இடுப்பிலிருந்து வெளியே வரமுடியாது. ஏனெனில் தாயின் பிறப்பு உறுப்பு ஓரளவுக்குதான் விரிவடையும். எனவே, குழந்தை போதுமான வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பே பிறந்துவிடுகிறது. இப்படி பிறந்தாலும் கூட அது சிக்கலாகத்தான் இருக்கிறது. எனவேதான் மற்ற உயிர்களை விட, மனிதகர்களின் பிரசவம் சவாலானதாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்திருந்தனர்.
ஆனால், குழந்தையின் மண்டை வளர்ச்சி மட்டுமே பிரசவத்தை சிக்கலாக்குவதில்லை, அதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருக்கின்றன என ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
நேச்சர் ஆய்விதழில் இது குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. அதன்படி, "மனித குழந்தை பிரசவ சிக்கலுக்கு, மூளை மற்றம் அதை கொண்டுள்ள மண்டையின் வளர்ச்சி மட்டுமே முதன்மை காரணம் அல்ல. இடுப்பின் வடிவம்-அமைப்பு, பிறப்பு கால்வாய் வழியாக குழந்தை நகரும் விதம் மற்றும் மனித இரு கால்களின் பரிணாம வளர்ச்சி ஆகியவை பிரசவத்தை சிக்கலாக்குகிறது. நேராக நிமிர்ந்த நடக்க மனித கால்கள் பரிணாமமடைந்திருந்தாலும், இடுப்பின் வடிவம் பிரசவத்திற்கு சிக்கலானதாகவே இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து இன்னும் அதிகமான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுகளின் முடிவில்தான் குழந்தை பிறப்பு ஏன் மனிதர்களுக்கு மட்டும் சிரமமானதாக இருக்கிறது? என்கிற கேள்விக்கான விடையை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications