ரஷ்யாvsஅமெரிக்கா.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மோதிக்கொண்ட தீர்மானங்கள்! காசா பாதுகாக்கப்படுமா?
நியூயார்க்: இன்று ஐநா பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், முன்னதாக நேற்று அதன் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைக்காததால், போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.
இரண்டாம் உலக போரிலிருந்த தப்பி, அகதிகளாக வாழ பாலஸ்தீனத்திற்குள் வந்த யூதர்கள் மெல்ல மெல்ல அங்கிருந்த மக்களை விரட்டிவிட்டு தங்களுக்கு என இஸ்ரேல் எனும் சொந்த நாட்டை உருவாக்க தொடங்கினர். தாய் நாட்டை இழந்த 23 லட்சம் பாலஸ்தீன மக்கள் மேலும், மேலும் இஸ்ரேலால் ஒடுக்கப்பட்டு கடைசியாக 'காசா' எனும் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட துண்டு நிலத்தில் சுருக்கப்பட்டனர். இஸ்ரேலின் இந்த அடக்குமுறைக்கு பின்னால் பிரிட்டனும், அமெரிக்காவும் இருந்திருக்கிறது. இதுதான் பாலஸ்தீன பிரச்னையின் தொடக்கப்புள்ளி.

தங்கள் நிலத்தில் சுதந்திரமாக வாழ்ந்த பாலஸ்தீனர்கள் எதிர்கொண்ட துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இப்படி ஆக்கிரமிப்பு செய்து இஸ்ரேல் உருவானபோது உலகமே அதற்கு எதிராக நின்றது. அந்த வரிசையில் இந்தியாவும் இருந்தது என்பது தனிக்கதை. இப்படி ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் ஒரு கட்டத்தில் அடக்குமுறையை எதிர்த்து சண்டை செய்ய தொடங்கினர். இது ஆயுத போராட்டமாகவும் பரிணமித்தது. ஹமாஸ் அமைப்பும் உருவானதும் அப்படிதான். ஹமாஸ், தங்கள் நாட்டின் விடுதலைக்காக அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும்.
ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவ்வளவுதான் மத்திய தரைக்கடல் பகுதியில் போர் தீ பரவிக்கொண்டது. 7ம் தேதி தொடங்கி இன்று வரை இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
எந்த அளவுக்கு தீவிரம் எனில், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, இஸ்ரேல், காசா மீது ஒரே வாரத்தில் வீசிவிட்டது. இந்த அளவு தீவிரமான தாக்குதல் காரணமாக இதுவரை 2,704 குழந்தைகள் உட்பட 6,546 பேர் உயிரிழந்துள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் போன்ற அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று கூடிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான விவாதங்கள் மேலெழுந்தன.
குறிப்பாக அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவாக தீர்மானத்தை முன்வைத்தது. இந்த தீர்மானத்தில், "இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை ஈரான் நிறுத்தக் வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 10 நாடுகள் வாக்களித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதற்கு எதிராக வாக்களித்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் குறைந்தது 9 வாக்குகளை பெற வேண்டும். குறிப்பாக வீட்டோ அதிகாரத்தை யாரும் பயன்படுத்தியிருக்கக்கூடாது. ஆனால் அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் இணைந்தது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்தது.
இது குறுத்து பேசிய சீனாவின் ஐநா தூதர் ஜாங் ஜுன், "போர்நிறுத்தம், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எதிர்பார்ப்புகளை இந்த தீர்மானம் பிரதிபலிக்கவில்லை. அதுமட்டுமல்லாது தற்போது நீடிக்கும் பிரச்னையை இது தீர்க்க உதவாது" என்று விமர்சித்துள்ளார். அதேபோல ரஷ்யாவின் ஐ.நா தூதர் வசிலி நெபென்சியா, "ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டு வரும் நிலையில், காசா மீதான இஸ்ரேலின் தரைவழி தாக்குதலுக்கு கவுன்சில் அங்கீகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமெரிக்கா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது" என் விமர்சித்தார்.
இதன் தொடர்ச்சியாக தனது பங்குக்கு மற்றொரு தீர்மானத்தை முன் வைத்தது ரஷ்யா. அதில், மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்றும், காசா மக்களை தெற்கு நோக்கி நகர இஸ்ரேல் பிறப்பித்துள்ள உத்தரவு வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இது போதுமான வாக்குகளை பெறாததால் தோல்வியை தழுவியது. ரஷ்யாவின் போர் நிறுத்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளதால், போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் இன்று ஐநா பொதுக்குழு கூடுகிறது. இதில் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகள் வரைவு தீர்மானத்தை முன்வைக்கும். 193 உறுப்பு நாடுகள் இதன் மீது வாக்களிக்கும். இதில் வீட்டோ பவரை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications