ஐநா பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்டுங்கள்.. ஈரான் தாக்குதலால் பதறிப்போன இஸ்ரேல்! உதவுமா அமெரிக்கா?
நியூயார்க்: தங்கள் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்க, இஸ்ரேல் மீது ஈரான் திடீர் தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடுகிறது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை தொடுத்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருந்த ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான் வாழி தாக்குதலை நடத்தியது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால், இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் ஈரான் இருக்கிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம், உஷாராக இருங்கள் என அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்திருந்தது. இதனையடுத்து அமெரிக்கா எச்சரித்ததை போல நேற்றிரவு ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்றிரவு மட்டும் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியிருக்கிறது. இதனால் இஸ்ரேல் மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள இஸ்ரேல், ஈரானின் பாதுகாப்பு படையை தீவிரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என்று கோரி உடனடியாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த வலியுறுத்தலின் அடிப்படையில் இன்று பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. ஐநாவுக்கான இஸ்ரேலின் நிரந்தரப் பிரதிநிதி கிலாட் எர்டான் இது குறித்து எழுத்தியுள்ள கடிதத்தில்,
"இந்த கடுமையான மீறல்களை உடனடியாக கண்டிப்பதற்கும், ஈரானின் பாதுகாப்புப் படையை தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பதற்கும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட வேண்டும். ஈரானின் தாக்குதல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை புறக்கணிப்பதை போன்று இருக்கிறது. இந்த தாக்குதல் சர்வாதிகாரத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
ஐநாவின் சட்டங்களை மீறி 200 ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231 (2015)ஐ மீறி இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701ஐ மீறி ஹெஸ்பொல்லாவுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது" என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியிருக்கிறது.
ஒருவேளை ஈரானின் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை அமெரிக்கா வழிமொழிந்தால், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தள்ளுபடி செய்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications