கியூபா.. வியட்நாம்.. ஆப்கான்.. குட்டி தேசங்களிடம் அடுத்தடுத்து வீழ்ந்த "பிக்பாஸ்" அமெரிக்காவின் கதை!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கியூபா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் என்று அடுத்தடுத்து மூன்று குட்டி தேசங்களிடம் அமெரிக்கா தோல்வி அடைந்து சர்வதேச அளவில் தலைகுனிவை சந்தித்துள்ளது. தன்னை ஒரு பிக்பாஸ் என்று மார் தட்டிக்கொள்ளும் அமெரிக்கா உலக அரசியலில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. உலக வரைபடத்தில் புள்ளி அளவிற்கு கூட இல்லாத குட்டி தேசங்களிடம் அமெரிக்கா வீழ்ந்த கதைதான் இந்த கட்டுரை!

Recommended Video

    Cuba-வில் இருந்து Afghanistan வரை.. குட்டி நாடுகளிடம் America வீழ்ந்த கதை

    இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அசாத்திய உழைப்பு மூலம் 2009ல் உருவான படம்தான் அவதார். பண்டோரா என்ற வேற்று கிரகத்தில் அமெரிக்க ராணுவம் ஆக்கிரமிப்பு செய்து அந்த கிரகத்து மக்களை கட்டுப்படுவதுதான் படம். தொடக்கத்தில் அமெரிக்காவை நவீன ஆயுதங்களும், துப்பாக்கிகளும், விமானங்களும் கொண்ட வலிமை வாய்ந்த படையாக இயக்குனர் காட்டி இருப்பார். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் அதே வலிமை வாய்ந்த அமெரிக்க படை வேற்று கிரக வாசிகளிடம் தோல்வி அடைந்து கிரகத்தை விட்டே வெளியேறும். வெறும் குச்சிகளையும், கம்புகளையும் வைத்தே வேற்று கிரக வாசிகளான நாவிகள் பண்டோரா கிரகத்தில் இருந்து அமெரிக்கர்களை விரட்டி அடிப்பார்கள்.

    அவதார் படத்தில் கற்பனையாக வந்த இந்த கதை நிஜ உலகில் நடந்தது என்றால் நம்புவீர்களா? அதிலும் ஒரு தடவை இல்லை மூன்று தடவை அமெரிக்கா மண்ணை கவ்வி, அவதார் படத்தில் மூட்டை முடிச்சை காட்டியது போலவே கட்டிக்கொண்டு வெளியேறியது என்றால் நம்புவீர்களா? அமெரிக்காவின் அந்த 3 தோல்விகள் குறித்த ஒரு குட்டி ஸ்டோரியை இங்கே பார்க்கலாம்..

    கியூபா

    கியூபா

    அமெரிக்காவின் முதல் பெரிய தோல்வி கியூபாவில்தான் தொடங்கியது. இப்போது இருப்பது போல அமெரிக்கா அப்போது பெரிய தலைக்கட்டு எல்லாம் கிடையாது. எதோ தான் உண்டு, தன் உள்நாட்டு பிரச்சனை உண்டு என்று அமைதியாகத்தான் இருந்தது. அதிலும் அப்போது அமெரிக்காவிலும் கறுப்பின வெள்ளையின மக்கள் பிரச்சனை அதிகம் இருந்த காலம். உள்நாட்டு சிவில் வாரும் கூட அமெரிக்காவில் அப்போதுதான் முடிந்து இருந்தது. "யார் வம்புக்கும் தும்புக்கு போக கூடாதுடா.. நாம் பாட்டுக்கு நாம் நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்" என்று என்று அமெரிக்கா அமைதியாக இருந்த 1800கள் கால கட்டம். அப்போது அருகிலேயே இருந்த கியூபா சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டு இருந்தது.

    சுதந்திரம்

    சுதந்திரம்

    ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த கியூபா விடுதலைக்காக போராடி, இரண்டு போர்களை முடித்து மூன்றாவது போருக்கு தயாராகிக்கொண்டு இருந்தது. அமெரிக்காவின் உதவியை இரண்டாவது போரிலேயே எதிர்பார்த்து காத்து இருந்த கியூபா.. மூன்றாவது போரிலாவது அமெரிக்காவின் உதவி கிடைக்குமா என்று எதிர்பார்த்தது. அதுவரை அமைதியாக இருந்த அமெரிக்கா.. "நான் யாருன்னு எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு வாத்தியாரே" என்று கியூபா விடுதலைக்காக களமிறங்கியது. கியூபாவை விடுக்கவிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் அமெரிக்காவிற்கு இல்லை. கியூபா போரில் தலையிட வேண்டும் என்று அமெரிக்காவில் "அடிமை வாதத்தை" ஆதரிக்கும் கட்சிகள் கோரிக்கை வைத்தன. கியூபாவை ஸ்பெயினிடம் இருந்து விடுதலை செய்தால், அவர்களை நாம் அடிமையாக்கலாம் என்று அமெரிக்காவில் சில குழுக்கள் திட்டம் போட்டன. இதன் காரணமாகவே கியூபா விடுதலை போரில் அமெரிக்கா களமிறங்கியது.

    போர்

    போர்

    ஸ்பெயினுக்கு எதிரான கியூபாவின் சுதந்திர போரில் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் போரிட்டு கியூபாவிற்கு உதவியது. 1895-1898 வரை நடந்த இந்த போரில் அமெரிக்காவின் உதவியுடன் கியூபா என்ற சுதந்திர தேசம் பிறந்தது.. அதோடு அமெரிக்காவிற்கு பிராக்சி ஆட்சி நடத்த பொம்மை நாடு ஒன்றும் கிடைத்தது. கியூபாவின் வெற்றிக்கு பின் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியதாக கூறினாலும் மறைமுகமாக கியூபாவில் அமெரிக்கா தொடர்ந்து ஆட்சியில் அதிகாரம் செலுத்தி வந்தது. அமெரிக்காவின் தலையீட்டால் கியூபாவில் வறுமையும், ஊழலும் தலைவிரித்தாடியது. கியூபாவின் கரும்பு ஆலைகளை அமெரிக்கா மறைமுகமாக கட்டுப்படுத்தியது. முக்கியமாக கியூபாவின் அதிபர் படிஸ்டாவின் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது. விளைவு படிஸ்டாவிற்கு எதிராகவும், அமெரிக்கா ஆதிக்கத்திற்கு எதிராகவும் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் 1953 புரட்சி போராட்டம் வெடித்தது.

    வெற்றி

    வெற்றி

    5 வருடம் நடந்த போராட்டத்தின் முடிவில் 1958ல் பிடல் வென்று அமெரிக்காவில் கியூபா ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கியூபாவில் செங்கொடி ஏற்றினார். அமெரிக்காவின் மூக்கிற்கு கீழேயே கம்யூனிச நாடு ஒன்று பிறந்தது. கம்யுனிச கொள்கை கொண்ட போராளிகளிடம் தோல்வி அடைந்ததை, அதிலும் கொரில்லா ஸ்டைல் போராளிகளிடம் தோல்வி அடைந்ததை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வேம்புலி கிட்ட தோத்து இருந்தா கூட ஓகே.. இப்படி டான்ஸ் ரோஸ்கிட்ட தோத்துட்டோமே என்று அமெரிக்கா உள்ளூர புழுங்கிக்கொண்டு இருந்தது. அப்போதுதான் அமெரிக்காவிற்கு அடுத்த அடி கொடுக்க வியட்நாம் வந்தது.

    பிரான்ஸ்

    பிரான்ஸ்

    அதே காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போர் முடிந்து பல்வேறு நாடுகளில் அரசியல் திருப்ப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தது. வியட்நாமிலும் ஜப்பான் ஆக்கிரமிப்பு முடிவிற்கு வந்து பிரான்சின் ஆதிக்கம் மட்டும் நீடித்து வந்தது. அப்படிப்பட்ட நிலையில்தான் வியட்நாமின் வடக்கு பகுதியை கம்யூனிச சித்தாந்தம் கொண்ட ஹோ சி மின் பிரான்ஸ் ஆதிக்கத்திற்கு எதிராக போராடி கைப்பற்றினார். இதனால் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என்ற மோதல் தீவிரமாக நடந்து வந்தது. பிரான்ஸ் ஆதிக்கத்திற்கும், ஹோ சிமின்னின் கம்யூனிச போராளிகளுக்கும் இடையில் மோதல் நடந்து வந்தது, கியூபாவில் போராடிய அதே காலத்தில் வியட்நாமிலும் அமெரிக்கா கவனம் செலுத்தியது.

    எப்படி

    எப்படி

    தொடக்கத்தில் எப்படி கியூபாவில் அமெரிக்கா வென்றுவிட்டு பின் மீண்டும் தோல்வி அடைந்ததோ அதே போலவே வியட்நாமிலும் அமெரிக்கா ஆதரவு அளித்த தெற்கு வியட்நாம் கொஞ்சம் வெற்றிபெறுவது போலவே இருந்தது. முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தெற்கு வியட்நாமையும், பிரான்ஸ் ஆதிக்கத்தையும் ஆதரித்தன. இதில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வடக்கு வியட்நாமை ஆதரித்தது. பனிப்போர் சமயம் என்பதால் வியட்நாம் போர் ஒரு துணை போர் போல நடந்து வந்தது. இது மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவி வந்தது.

    கழன்று கொண்டது

    கழன்று கொண்டது

    பல லட்சம் குண்டுகள், விமானங்கள், வீரர்கள் என்று நவீனமான போரை அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீது ஏவியது. ஆனால் வடக்கு வியட்நாம் போராளிகளோ அவதார் படத்தில் வருவது போலவே கம்புகளையும் , விற்களையும் வைத்து கொரில்லா ஸ்டைல் போரில் ஈடுபட்டனர். விமானம் மூலம் அமெரிக்கா போர் புரிய, காடுகளுக்குள் ஒழிந்து கொண்டு வடக்கு வியட்நாம் போராளிகள் வித்தை காட்டினார்கள். கியூபாவில் கொரில்லா தாக்குதலில் அடி வாங்கியது போலவே வடக்கு வியட்நாமிலும் ஹோ சிமின் உருவாக்கிய படைகளிடம் அமெரிக்கா சுருண்டது. கிட்டத்தட்ட 19 வருடம் மறைமுகமாகவும், நேரடியாகவும் இந்த போரில் தொடர்ந்து அமெரிக்கா ஈடுபட்டு வந்தது.

    புரிந்தது

    புரிந்தது

    1973 வரை தாக்குப்பிடித்த அமெரிக்கா.. ஐயோ வியட்நாமா வேண்டவே வேண்டாம். அவர்கள் எங்கிருந்து தாக்குவார்கள் என்றே தெரியாது, மோசமானவர்கள் என்று போரை பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறிட்டது. ஆம் வடக்கு வியட்நாம் வீரர்களை, அவர்களின் கொரில்லா தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா 1973ல் வெளியேறியது. விளைவு 1975ல் வடக்கு வியட்நாம் இந்த போரில் பிரான்ஸை வீழ்த்தி வென்றது. மொத்தமாக போரில் கம்யூனிச நாடுகள் வென்றதாக அறிவிக்கப்பட்டதோடு வடக்கு தெற்கு வியட்நாம் இணைந்து மொத்தமாக வியட்நாம் என்ற கம்யூனிச நாடு பிறந்தது. கியூபாவில் தோல்வி, வியட்நாமில் தோல்வி என்று அமெரிக்கா நிலைகுலைந்து போனது.. அதிலும் வியட்நாம் தோல்வி அமெரிக்க படை வீரர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளை, ஸ்கிட்ஸோபெர்னியா போன்ற அதீத மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

    அடங்கி

    அடங்கி

    இவ்வளவுக்கும் பின் அமெரிக்கா அடங்கி இருக்காமல் ஆப்கானிஸ்தானில் போர் தொடுக்க கிளம்பியது. இரண்டு தோல்விக்கு பின் மூன்றாவது தோல்வி அங்குதான் "லோட்" ஆனது. அப்போது ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1980களின் தொடக்கத்தில் இங்கு முஜாகிதீன் அமைப்பு ரஷ்ய ஆதிக்கத்திற்கு எதிராக போராடி வந்தது. இங்கு முஜாகிதீன் அமைப்பிற்கு உதவுகிறேன், கியூபாவிற்கு விடுதலை வாங்கிக்கொடுத்து போல உங்களுக்கும் விடுதலை வாங்கி தருகிறேன் என்றுதான் அமெரிக்கா உள்ளே வந்தது. ரஷ்யாவை எதிர்க்கும் விதமாக முஜாகிதீன் அமைப்பிற்கு அமெரிக்காவின் சிஐஏ ஆயுத பயிற்சி தொடங்கி நிதி உதவி வரை அளித்தது. அமெரிக்காவின் உதவியால் முஜாகிதீன் வளர்ச்சி அடைய.. ரஷ்யாவும் வேறு வழியின்றி 1989ல் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. ஆப்கானிஸ்தானுக்கு ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது.

     மோதல்

    மோதல்

    ரஷ்யா வெளியேறிய பின் என்ன செய்வது என்று தெரியாமல் முஜாகிதீன் அமைப்பில் இருந்தவர்களுக்கு உள்ளேயே மோதல் வெடித்தது. இதை அமெரிக்காவும் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தது. இதன் முடிவில்தான் முஜாகிதீன் அமைப்புகளில் இருந்து வந்தவர்கள், மற்ற இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து வந்தவர்கள் இணைந்து தாலிபான் என்ற வலதுசாரி இஸ்லாமிய அமைப்பை உருவாக்கினார்கள். 1990களின் தொடக்கத்திலேயே காபுலை கைப்பற்றி ஆட்சியை பிடிப்பதே எங்கள் நோக்கம் என்று தாலிபான்கள் கூறினார்கள். 1996ல் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் கந்தகாரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி அமைத்தனர். ஆப்கான் தாலிபான் வசம் சென்ற அதே காலகட்டத்தில்தான் ஒசாமா பின்லேடன் என்ற தீவிரவாதியும் வளர்ந்து கொண்டு இருந்தான். இவரின் அல் கொய்தா அமைப்பும் வேகமாக வளர்ந்து வந்தது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வளர்வதை வேடிக்கை பார்த்த அமெரிக்கா சவுதி, குவைத், பாலஸ்தீனம் ஆகிய இடங்களில் படைகளை குவித்து, பல்வேறு ஆக்கிரமிப்புகளை செய்தது.

    ஒசாமா

    ஒசாமா

    இதனால் கோபம் அடைந்த ஒசாமா பின் லேடன் 2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்திவதாக கூறி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தினார். ஒசாமா தாலிபான்களுக்கு நேரடியாக நிதி உதவி அளித்து வந்ததவர் என்பது அமெரிக்காவிற்கும் தெரியும். ஒசாமாவிற்கும் தாலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, இவருக்கு பல்வேறு பயிற்சிகளை தாலிபான்கள் வழங்கியதும் அமெரிக்காவிற்கும் தெரியும். இதனால் ஒசாமாவின் இருப்பிடத்தை காட்டிக்கொடுக்கும்படி தாலிபான்களிடம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆணையிட்டார். ஆனால் தாலிபான்கள் ஒசாமாவா.. அது யாரு என்று கேட்டு சமாளிக்க பார்த்தது. இதனால் கோபம் அடைந்த புஷ் தாலிபான்களுக்கு எதிராக போர் அறிவித்தார். ஒஸாமாவிற்கு தஞ்சம் அளித்ததால் தாலிபான்களை அமெரிக்கா பகைத்துக்கொண்டது. தாலிபான்களின் உருவாக்கத்திற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த அமெரிக்காவே தாலிபான்களுக்கு எதிராக போர் தொடுத்தது.

    கியூபா வரலாற்று

    கியூபா வரலாற்று

    "தாலிபான் விலை கொடுக்க போகிறது" என்ற முழக்கத்தோடு 2001ல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுத்தது. இரண்டே மாதங்களில் தாலிபான் படைகள் தோல்வி அடைந்தது. அதோடு அங்கு அமெரிக்காவின் பிராக்சி அரசும் பதவி ஏற்றது. ஆப்கானிஸ்தானின் முகம் மாறியது. தாலிபான்கள் அமைதியாக தனது காலத்திற்காக காத்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பி நாடும் வேகமாக முன்னேறியது. சினிமா முதல் கிரிக்கெட் வரை பல விஷயங்கள் ஆப்கானிஸ்தானில் அறிமுகம் ஆகி அந்த நாட்டின் முகம் மாறியது. ஆனால் எப்படி கியூபா விடுதலைக்கு காரணமாக இருந்துவிட்டு பின் அதே கியூபாவிடம் அமெரிக்கா வீழ்ந்ததோ அதேபோல்தான் இங்கும் அமெரிக்கா வீழ்ந்தது.

    வீழ்ச்சி

    வீழ்ச்சி

    ஆப்கானிஸ்தானில் தாலிபானை கட்டுப்படுத்த முடியாமல் கடந்த சில வருடங்களாக அமெரிக்க படைகள் திணறியது. 20 வருடமாக போர் நடத்தியும் தாலிபான்களுக்கு அமெரிக்காவால் முடிவு கட்ட முடியவில்லை. வெறும் 80 ஆயிரம் தாலிபான் படைகளை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறியது. அமெரிக்காவின் பொருளாதார சரிவு, போர் செலவு, அமெரிக்க வீரர்களின் 20 வருட போர் என்று பல்வேறு காரணங்களால் அமெரிக்கா இந்த போர் மீது ஆர்வம் இழந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சுவார்த்தை முன்னெடுப்பகள் நடத்தப்பட்டு கடந்த வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டது.

    தோல்வி

    தோல்வி

    இதன் விளைவாகவே தற்போது அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் தாங்கள் உருவாக்கிய அரசை கைவிட்டுவிட்டு வெளியேறி உள்ளது. தாலிபான் எதிர்பார்த்து காத்திருந்த அந்த காலம் 20 ஆண்டுகளுக்கு பின் வந்தது. அமெரிக்க படைகள் வெளியேறி இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே அங்கு தாலிபான்கள் வென்று இப்போது அதிபர் அஷ்ரப் கானியையும் அகற்றி உள்ளது. இதில் குரூர நகைச்சுவை என்னவென்றால் தாலிபான் போன்ற முஜாகிதீன் அமைப்புகளுக்கு எதிராக இங்கு தொடக்கத்தில் போர் நடத்தி அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்ட அதே ரஷ்யாதான் தற்போது தாலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்க படைகள் இங்கிருந்து இந்த மாத இறுதியில் வெளியேறிய பின் மொத்தமாக அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் எபிசோட் முடிவிற்கு வரும்.

    உலக அளவில் அமெரிக்காவின் மானம்

    உலக அளவில் அமெரிக்காவின் மானம்

    அடுத்தடுத்து கியூபா, வியட்னாம், ஆப்கானிஸ்தான் என்று மூன்று நாடுகளில்.. அதுவும் சிறிய நாடுகளிடம் தோல்வி அடைந்து அமெரிக்கா பெரிய தலைகுனிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவை நம்பி இனி களமிறங்க கூடாது, போராட கூடாது என்ற நிலைமையை உலக நாடுகளுக்கு இந்த தோல்விகள் எடுத்துரைத்துள்ளன. அதிலும் அமெரிக்காவை பெரிதும் நம்பிய ஆப்கான் அரசை அமெரிக்கா கைவிட்டது.. அமெரிக்க நட்பு நாடுகளுக்கும், நேட்டோ படைகளுக்கும் மிகப்பெரிய எச்சரிக்கையாக மாறியுள்ளது. பிக்பாஸ் என்று உலக நாடுகளுக்கு நாட்டாமை செய்து கொண்டு இருந்த அமெரிக்கா மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துவிட்டு.. அடுத்த படையெடுப்பிற்காக, அரசியல் ஆட்டத்திற்காக .. இன்னுமொரு தோல்விக்காக உலக மேப்பில் நாடுகளை தேடி வருகிறது!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+