பாகிஸ்தானில் அமெரிக்கா ஆடிய கேம்! ஒரே ஒரு "code word.." தூக்கி வீசப்பட்ட இம்ரான் கான்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் எப்போதும் சர்ச்சைகளுக்கும் ராணுவப் புரட்சிகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால், இப்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு டாப் சீக்ரெட் தூதரக ஆவணம் கசிந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவிநீக்கம் தொடர்பாகவும் அதில் வெளிநாடுகளின் தொடர்பு இருந்தது தொடர்பாகவும் சில தகவல்கள் வெளியாகி உலக அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கிரிக்கெட் உலகிலிருந்து அரசியல் உலகிற்குள் நுழைந்து பாகிஸ்தானின் பிரதமரானவர் இம்ரான் கான்.. 2018ல் பாகிஸ்தான் பிரதமரான இவர் 2022 வரை அந்தப் பதவியில் தொடர்ந்தார். இருப்பினும், 2022ல் கூட்டணி கட்சிகள் இவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்ளவே ஆட்சி கவிழ்ந்தது. இருப்பினும், அப்போதே இவர், "அமெரிக்காவின் சதியால் தான் எனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது" என்று தொடர்ச்சியாகக் கூறி வந்தார்.

US behind Imran Khan Ouster Pakistan Imran Khan

வெளியான ஆவணம்

இருப்பினும், அன்று அமெரிக்கா இதை வெறும் கட்டுக்கதை என்று மறுத்தே வந்தது. இதற்கிடையே டிராப் சைட் என்ற புலனாய்வு ஊடகம் வெளியிட்டுள்ள ஆவணம் இம்ரான் கான் சொல்வது உண்மை தான் என்பதைக் காட்டியிருக்கிறது. கடந்த 2022 ஏப்ரலில் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குச் சற்று முன்பு, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதருக்கும், அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி டொனால்ட் லூவுக்கும் இடையே ஒரு ரகசிய சந்திப்பு நடந்தது. அந்தச் சந்திப்பின் அதிகாரப்பூர்வப் பதிவுதான் இந்த 'கேபிள் I-0678'.

இந்த ரகசியச் சந்திப்பில் டொனால்ட் லூ பயன்படுத்திய "ஆல் வில் பி ஃபர்கிவன்" (All will be forgiven) அதாவது எல்லாம் மன்னிக்கப்படும் என்ற வார்த்தைதான் இப்போது சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. "இம்ரான் கானை பதவியிலிருந்து நீக்கினால், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் இருக்கும் கசப்புகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, மீண்டும் நல்லுறவு தொடங்கும்" என்பதற்கான சிக்னல் அது.

அமெரிக்கா கோபம்

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு ஆதரவாக இம்ரான் கான் எடுத்த தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவைக் கோபப்படுத்தியது. மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு பாகிஸ்தானில் ராணுவ முகாம்களை அமைக்க இம்ரான் கான் இடம் தர மறுத்ததும் அமெரிக்காவைக் கடுமையாகக் கோபப்படுத்தியது. இதனால் தான் இம்ரான் கானை அதிகாரத்தில் இருந்து தூக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. "இம்ரான் கான் ஆட்சியில் நீடித்தால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும்" என்றும் அமெரிக்கா மிரட்டியதாக அந்த ஆவணம் கூறுகிறது.

இம்ரான் கானின் ஆட்சி கவிழ்வதற்கு முன்பே, பாகிஸ்தானின் ராணுவ தளபதி இம்ரான் கானுக்குத் தெரியாமல் அமெரிக்காவுடன் தனியாக 'டீல்' பேசத் தொடங்கிவிட்டது என்ற அதிரடித் தகவலையும் இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக 2021லேயே சிஐஏ தொடர்புடைய ஒரு லாபியிஸ்ட்டை ராணுவம் பணிக்கு அமர்த்தியுள்ளது.

என்ன நடந்தது

இம்ரான் கான் நீக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவோடு அமைந்த ஷெரீப் அரசு, உக்ரைன் போருக்காக அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் மூலம் ரகசியமாக ஆயுதங்களை விநியோகம் செய்யத் தொடங்கியது. இதற்குப் பரிசாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகள் பாகிஸ்தானுக்குத் தங்கு தடையின்றிக் கிடைத்தன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இம்ரான் கான் சிறைக்குச் சென்ற பிறகு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தன்னை 'ஃபீல்டு மார்ஷல்' ஆகத் தரம் உயர்த்திக் கொண்டு, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டார். மேலும், டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்த பிறகு கிரிப்டோகரன்சி மற்றும் ரேர் எர்த் மெடல் தொடர்பான ஒப்பந்தங்களை உருவாக்கி அமெரிக்காவுடன் கைகோர்த்தார்.

மாறிய காட்சிகள்

பாகிஸ்தானும் தனது பங்கிற்கு சீனாவின் சிபெக் திட்டத்தை மெதுவாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அமெரிக்காவுக்கு விசுவாசமாக மாறியுள்ளது. தற்போது அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தராக (Mediator) செயல்பட்டு வரும் இந்த நேரத்தில், இந்த ஆவணம் லீக் ஆகியிருப்பது உலக அரங்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+