விஏஓ முதல் தாசில்தார் வரை.. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசு ஊழியர்கள் மீது பாய்ந்த வழக்கு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கி, விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.7 லட்சம் வங்கி பரிவர்த்தனையை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக கோத்தகிரி தாசில்தார் கோமதி உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக தப்பி ஓட முயன்ற புரோக்கரும் சிக்கினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. குறிப்க அனுபோகச் சான்றிதழ், அடங்கல் உள்ளிட்ட பல சான்றிதழ்களை வழங்குவதற்காக அதிகாரிகள், பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், தீபாவளி பண்டிகையையொட்டி ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்கள் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அதிகாரிகளுக்கு வழங்குவதாகவும் நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் பறந்தன.

இதையடுத்து கடந்த 23ம் தேதி இரவு 7 மணிக்கு நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரைக் கண்டதும் 2 புரோக்கர்கள் தப்பி ஓட முயற்சித்தார்கள் அவர்களில் ஒருவரை போலீசார் அதிரடியாக துரத்திப் பிடித்தனர். அலுவலகத்தின் கதவுகளை மூடிய போலீசார் கோத்தகிரி தாசில்தார், துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்கள், புரோக்கர் மற்றும் அங்கிருந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்கள்.
இதில் கோத்தகிரி தாசில்தார் கோமதியின் வங்கிக் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 91 ஆயிரம் இருந்தது. இதேபோல் துணை தாசில்தார் உமா மகேஸ்வரி கணக்கில் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் இருந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் பிரியா வங்கிக்கணக்கில் 54 ஆயிரத்து 750 ரூபாய் மற்றும் ராஜ்கமல் கணக்கில் 22 ஆயிரத்து 800 ரூபாயும், ரொக்கப்பணம் 6 ஆயிரம் ரூபாயும், நவீன் என்பவரிடம் 4,200 ரூபாயும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோத்தகிரி தாசில்தார் கோமதி மற்றும் துணை தாசில்தார் உமா மகேஸ்வரி உள்பட சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் கோமதி, துணை தாசில்தார் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்கமல், பிரியா மற்றும் நவீன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.7 லட்சம் வங்கி பரிவர்த்தனை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் நேற்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications
