ஊட்டி விஏஓவுக்கு இவ்வளவு சொத்தா? பெண் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரஷியா பேகம். இவர் பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. அண்மையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்தும், லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்கும் அரசு ஊழியர்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளிக்கலாம். ஆதாரத்துடன் அளிக்கப்படும் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. அதேபோல் லஞ்சம் கேட்போரை கையும் களவுமாக பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கிறது.

லஞ்சம் வாங்கி சிக்காதவர்கள் என்றால், அவர்களின் சொத்து பட்டியலை சேகரித்து அவர்கள் லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்து என்பதை கண்டுபிடித்தும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு விஏஓ அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராக ரஷியா பேகம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள தூனேரி, நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து உள்ளார். அப்படி அந்த கிராமங்களில் பணிபுரிந்த காலங்களில் பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகளை சிலர் கிளப்பினார்கள்.
மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் பறந்தன. அதன் பேரில் நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் விசாரணைக்கு பிறகு புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதிய, லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ரஷியா பேகம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று நீலகிரி மாவட்ட தலைநகரான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரஷியா பேகம் வசித்து வரும் வாடகை வீட்டிறகு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். அங்கு அவர்கள் வீடு முழுக்க திடீரென சோதனை நடத்தினர். வீட்டில் பணம், தங்கம், சொத்து பத்திரங்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 11 மணி வரை என 6 மணி நேரம் நடந்தது. சோதனையில் சில ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும் போது, தூனேரி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் ரஷியா பேகத்தின் தம்பி பெயரில் வீடு கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் தஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதியில் வீடு மற்றும் கார் வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளில் அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.60 லட்சத்திற்கும் மேலாக சொத்து சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்திய பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதற்கிடையே ரஷியா பேகத்தின் சொந்த ஊரான தஞ்சாவூர் அம்மாபேட்டையிலும் அவர் புதிதாக வீடு கட்டி உள்ளதாகவும், அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications