நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்! உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. மட்டுமல்லாது அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுத்திருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை கொடுத்திருந்தது.

இந்நிலையில் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில், "நீலகிரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகின்றன. ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் - கூடலூர் இடையே தவளைமலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மட்டுமல்லாது மண் சரிவில் உருண்டு வந்த பெரிய பாறைகள் மரங்களுக்கு நடுவே சிக்கியிருக்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் இருக்கிறது. எனவேதான் இரவு நேர போக்குவரத்துக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லவும் அவசர நேரத்தில் உள்ளூர் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அரசு பேருந்துகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே போக வேண்டும். சுற்றுலா வாகனங்கள் கவனமுடன் இயக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பேரிடரை சமாளிக்க காவல்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய்த் துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications