அடடே.. இது தமிழா? மோடி சந்தித்த ஆஸ்கர் தம்பதி.. “பொம்மன்” தெரியும் - “பெள்ளி” அர்த்தம் இதுவா?
நீலகிரி: ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற தமிழ்நாட்டின் முதுமலை பகுதியை சேர்ந்த யானையை வளர்க்கும் பொம்மன் - பெள்ளி தம்பதியை இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருக்கும் நிலையில், பெள்ளி என்ற பெயருக்கான காரணம் உங்களுக்கு தெரியுமா? தமிழறிஞரும் எழுத்தாளருமான மகுடேசுவரன் இது குறித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் வெளியான 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை அதன் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அந்த பாடலின் ஆசிரியர் பெற்றனர். இந்த விழாவிற்கு முன்பே இந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆஸ்கர் விருது: அது நிறைவேறியது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியர்கள் சர்பிரைஸ் பேக்கேஜாக அமைந்தது தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திற்கு அஸ்கர் விருது வழங்கப்பட்டதுதான். காரணம், இது முதுமலையை சேர்ந்த பொம்மன் - பெள்ளி மற்றும் அவர்கள் வளர்க்கும் குட்டி யானை பற்றியது.
பொம்மன் - பெள்ளி தம்பதியின் வாழ்கை, அவர்களுக்கு யானைக்கும் இருக்கும் நெருக்கம், முதுமலை பழங்குடியின மக்களின் கலாச்சாரம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என அனைத்தையும் காட்சிபடுத்தி இருந்தது எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படம். இந்த திரைப்படம் ஆஸ்கர் வென்றதில் இருந்தே உள்ளூர் ஊடகங்கள் தொடங்கி தேசிய ஊடகங்கள், சர்வதேச ஊடகங்கள் வரை அனைத்து கேமராக்களும் முதுமலையில் வாழும் பொம்மன் - பெள்ளியை நோக்கி திரும்பின.

பிரதமர் மோடி சந்திப்பு: இந்த நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி இந்த தம்பதியை சந்திக்க முதுமலை செல்வதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. அன்றில் இருந்து மீண்டும் இந்த தம்பதி பற்றி செய்திகள் ஊடகங்களில் இடம்பிடிக்கத் தொடங்கின. மோடி வருகையை ஒட்டி இந்த தம்பதிக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன. இந்த நிலையில் நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று முதுமலை பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்களின் செயல்பாடுகளுக்காக பாராட்டு தெரிவித்ததுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி யானை குட்டிகளை வளர்ப்பது பற்றி தங்களிடம் கேட்டதாகவும், தங்களை டெல்லிக்கு அழைத்ததுடன், தன்னிடம் எந்த உதவியாக இருந்தாலும் கேட்குமாறும் கூறியதாகவும் பெள்ளி தெரிவித்தார்.

பெள்ளி பெயர் காரணம்: இந்த நிலையில் பெள்ளி என்ற பெயர் ஆங்கில பெயரைபோல் இருப்பதாக சில கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அது தூய தமிழ் பெயர் என்று விளக்கமளித்து உள்ளார் தமிழறிஞரும் எழுத்தாளருமான மகுடேசுவரன். இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "விருது பெற்ற யானைப் படத்தில் இடம்பெற்ற இணையர் பெயரைக் கவனித்தீர்களா ? பொம்மன், பெள்ளி. அம்மையின் பெயர் பெள்ளி. ஆள் என்பதிலிருந்துதான் ஆண் என்ற சொல் வருவதைப்போல, பெள் என்பதிலிருந்துதான் பெண் என்ற சொல் வருகிறது.
பெள் என்றால் குழந்தையின்மீது பெருகும் பாசப்பேருணர்ச்சியை நிகர்த்த அன்பு. அத்தகைய விருப்புணர்வு. அதன்வழியே அகலாது நிற்கும் பேணும் உணர்வு. பெட்பு, பெட்டை, பேடை, பெண்ணை, பேணுதல் என அனைத்திற்கும் வேராகும் சொல் அது. அந்தச் சொல்லினை அந்தப் பழங்குடி அம்மை தன் பெயராகச் சூடியிருக்கிறார். ஒரு மொழியானது தொன்மை மாறாத, பழமை மாறாத மக்களிடத்தில் வாழ்வது இப்படித்தான்."












Click it and Unblock the Notifications