பீகாரில் 3.44% வாக்குகளை பெற்ற பிரசாந்த் கிஷோர்! நோட்டாவுடன் போட்டிபோட்ட ஜன்சுராஜ் கட்சி நிர்வாகிகள்
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி சுமார் 3.44 சதவிகித வாக்குகளை பெற்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பீகாரில் போட்டியிட்ட 238 தொகுதிகளில் ஏராளமான வேட்பாளர்கள் 3வது இடத்தை பிடித்திருந்தாலும், சில தொகுதிகளில் நோட்டாவுடன் போட்டி போட வேண்டிய நிலையில் இருந்துள்ளனர்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதியாகிவிட்ட நிலையில், 10வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை என்டிஏ கூட்டணி 204 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

அதேபோல் பீகார் தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சியின் செயல்பாடுகள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஜன்சுராஜ் கட்சிக்கு 0-2 தொகுதிகள் வரை மட்டுமே வெல்ல வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கேற்ப வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட போது ஜன்சுராஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஆனால் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின், அந்த முன்னிலையிலும் முடிவுக்கு வந்தது. இதன்பின் ஜன்சுராஜ் கட்சியின் எந்த வேட்பாளர்களும் முன்னிலைக்கு வரவே இல்லை.
ஜன்சுராஜ் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், கடைசி நேரத்தில் பிரசாந்த் கிஷோர் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தது அந்தக் கட்சிக்கு பின்னடைவாக மாறியது. கட்சியின் தலைவரே தோல்விக்கு பயந்து தேர்தலில் போட்டியிடாமல் விலகினால் எப்படி என்று அக்கட்சியின் ஆதரவாளர்களே முணுமுணுக்க தொடங்கினர்.
இந்த நிலையில் பீகார் தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் பலரும் 3வது இடத்தை பிடித்துள்ளனர். ஆனால் சில தொகுதிகளில் நோட்டாவுடன் போட்டி போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு சுமார் 3.44 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலமாக பீகார் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற 7வது கட்சி என்ற பெருமையை பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி பெற்றுள்ளது. இதையடுத்து பிரசாந்த் கிஷோர் மீண்டும் வியூக வகுப்பாளர் பணிக்கே செல்வாரா அல்லது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications