என்ன நடக்கிறது?.. விரைவீக்கம் பிரச்சினைக்கு சென்ற இளைஞருக்கு குடும்பக் கட்டுப்பாடு.. பீகாரில் ஷாக்
விரைவீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, திருமணம் செய்துகொள்வதாக அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார் மனாகா யாதவ்
பாட்னா: விரைவீக்கம் பிரச்சினைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்ட பரிதாப சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
இந்த விஷயம் தெரியவந்த அந்த இளைஞர் தனது எதிர்காலமே பறிபோய்விட்டதாக கூறி அழுதிருக்கிறார். மேலும், இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மருத்துவக் குழுவை அமைத்து மாவட்ட சுகாதார அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ஆபத்தாகும் அலட்சியம்..
மருத்துவர்களின் அலட்சியத்தால் நடந்த விபரீதங்கள் குறித்த பல செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். கால் வலிக்கு சென்றவருக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்தது; கத்தரிக்கோலை மறந்து வயிற்றில் வைத்தே தைத்தது என்பன போன்ற பல சம்பவங்கள் அவற்றில் அடங்கும். மருத்துவர்களின் அலட்சியத்தால் மரணங்களும் நேரிட்டிருக்கிறது. அந்த வகையில், பீகார் மருத்துவர்களின் அலட்சியம் ஒரு இளைஞரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

விரைவீக்க பிரச்சினை
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் ஜகாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் மனாகா யாதவ் (32). கூலித்தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது பெற்றோர் அவருக்கு வரன் தேடி வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே மனாகா யாதவுக்கு விரைப் பையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அருகில் உள்ள க்ளீனிக்கில் அவர் கேட்ட போது, இதற்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் தீர்வு என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, இதுகுறித்து தனது பெற்றோரிடம் மனாகா யாதவ் தெரிவித்துள்ளார். விரைவீக்க அறுவை சிகிச்சைக்கு பிறகு, தான் திருமணம் செய்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்படி, கடந்த வாரம் தனது கிராமத்துக்கு அருகே உள்ள செயின்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்காக உள்நோயாளியாக அவரை கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதித்தனர்.

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்
அதன்படி, அவருக்கு அன்றைய தினம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் மயக்கம் தெளிந்ததும் மனாகா யாதவை பார்க்க வந்த மருத்துவர், உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது எனத் தெரிவித்தார். இதை கேட்ட அந்த நொடியே பயத்திலும் அதிர்ச்சியிலும் அலறியுள்ளார் மனாகா யாதவ். விரைவீக்க பிரச்சினைக்கு வந்த எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டீர்களே எனக் கேட்டு கதறி அழுதுள்ளார் மனாகா யாதவ். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பூதாகரமானதால், இதுகுறித்து விசாரிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications