ஒரே நாளில் குளத்தையே ஆட்டையை போட்ட மாஃபியா கேங்க்.. போலீஸ் வந்ததும் நடந்த சம்பவத்தை பாருங்க
பாட்னா: வடிவேலுவின் கிணத்தை காணோம் காமெடியை மெய்ப்பிக்கும் வகையில், மணல் மாஃபியாக்கள் ஒரு முழு குளத்தையும் மூடி அங்கு கொட்டகைகளையும் அமைத்து விட்டனர். பீகாரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் கடந்த சில நாட்களாக சில வினோத நிகழ்வுகள் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பாகத்தான் பயன்பாடற்ற விமானம் ஒன்று டிரக்கில் கொண்டு செல்லப்பட்ட போது பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. சாலையில் விமானம் நிற்பது போன்று காட்சியளித்ததால் பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

அதேபோல், நேற்று பழைய ரயில் பெட்டி ஒன்றை சாலைவழியாக டிரக்கில் வைத்து கொண்டு செல்லப்பட்டது. இந்த டிரக்கும் விபத்தில் சிக்கியது. இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்:
கிணத்தை காணோம் பாணியில்: வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை காணோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க செல்வார். புகாரை கேட்டு கடுப்பாகும் போலீசார்.. கிணற்றில் இருந்த மோட்டாரை காணோமா என கேட்பார்கள். இல்லை கிணற்றைத்தான் காணோம் என்று நேரில் காட்டுவதாகவும் அழைத்து செல்வார். இந்தக் காமெடியை எல்லோரும் டிவிக்களில் பார்த்து ரசித்து இருப்போம். தற்போது இதை மிஞ்சும் அளவுக்கு ஒரு நிகழ்வு பீகாரில் நடந்துள்ளது.
பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதி ஒன்றில் குளம் ஒன்று அமைந்து இருந்தது. இந்தக் குளத்தில் கிடக்கும் தண்ணீரை சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். அதேபோல், மீன்பிடித்தல் போன்றவற்றிலும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஈடுபட்டு வந்து இருக்கிறார்கள்.
மணல் மாஃபியாக்கள்: சமீப காலமாக அப்பகுதியில் உள்ள நிலத்தின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறதாம். இதனால், அங்குள்ள நில மாஃபியாக்கள், குளம் பெரிதாக இருக்கிறதே.. பட்டா போட்டு விற்றுவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். குளத்தை வளைத்து போட மணலை கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மண்டல அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதனால், ஆக்கிரமிப்பை கொஞ்சம் கைவிட்ட மாஃபியாக்கள், பின்னர் இரவு நேரங்களில் மட்டும் குளத்தை சமப்படுத்தும் பணியில் ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளனர். உள்ளூர் மக்களும் இதை கவனிக்காமலே இருந்த நிலையில், மொத்த குளத்தையும் மூடி அங்கு கொட்டகைகளையும் அமைத்து விட்டனர். காலையில், விழித்து பார்த்த மக்கள் குளத்தில் திடீரென குடில்கள் முளைத்து இருக்கிறது எனப் பார்த்த பின்னர்தான் விஷயம் தெரிந்தது.
பின்னங்கால் பிடறியடிக்க ஓட்டம்: உடனடியாக இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரிக்க போலீஸ் வரும் விஷயம் அறிந்ததுமே துண்டைக்காணோம்.. துணியைக் காணோம்... என மொத்த மாஃபியாக்களும் பின்னங்கால் பிடறியடிக்க ஓட்டம் எடுத்தனர். குளத்தையே ஆக்கிரமித்த இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.











Click it and Unblock the Notifications