முதல்வர் நிதிஷ் குமார் தான்.. ஆனால் ‛பவரை’ பிடுங்கிய பாஜக.. 20 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக மாற்றம்
பாட்னா: பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. 10 வது முறையாக ஜேடியூ கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகி உள்ளார். அவருடன் மொத்தம் 26 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் தான் கடந்த 20 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக நிதிஷ் குமார் தன் வசம் வைத்திருந்த உள்துறையை பாஜகவிற்கு விட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்ட சபைதேர்தலில் பாஜக -ஜேடியூ தலைமையிலான என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் பீகாரில் அந்த கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகளில் 123 இடங்களில் வென்றால் தனித்து ஆட்சி அமைக்கலாம். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

என்டிஏ கூட்டணியில் பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் பீகாரின் புதிய முதல்வராக நேற்று ஜேடியூ கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்று கொண்டார். அவர் 10 வது முறையாக முதல்வரானார். அதேபோல்26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். நிதிஷ் குமாரை சேர்த்தால் மொத்தம் 27 பேர் பதவியேற்றுள்ளனர். கட்சி வாரியாக பார்த்தால் பாஜகவின் 15 பேர், ஜேடியூவின் 8 பேர், சிராக் பஸ்வானின் எல்ஜேபி (ராம் விலாஸ்) கட்சியின் 2 பேர், ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் கட்சியின் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் பதவியேற்றனர்.
இந்நிலையில் தான் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் இன்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் உள்துறை பாஜகவின் சாம்ராட் சவுத்ரிக்கு வழங்கப்பட்டது. உள்துறை என்பது தான் மாநிலத்தில் போலீஸை கட்டுக்குள் வைத்திருக்கும் இலாகாவாகும். சட்டம் - ஒழுங்கு உள்ளிட்டவற்றை நேரடியாக உள்துறை அமைச்சர் தான் கவனிப்பார். கடந்த 20 ஆண்டுகளாக இந்த உள்துறையை நிதிஷ் குமார் தான் நிர்வகித்து வந்தார். ஆனால் தற்போது முதல் முறையாக நிதிஷ் குமார் உள்துறையை பாஜகவுக்கு விட்டு கொடுத்துள்ளது.
அதேபோல் பீகார் சட்டசபை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராகவும், துணை முதல்வராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பாஜகவின் விஜய் குமார் சின்ஹாவிற்கு வருவாய் மற்றும் நில சீர்த்திருத்த துறை வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் மங்கல் பாண்டேவிற்கு சுகாதாரத்துறை வழங்கப்பட்டுள்து.
அதேபோல் பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் திலிப் ஜெய்ஸ்வாலுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியமான துறைகளை பாஜக கைப்பற்றி உள்ளதால் முதல்வராக நிதிஷ் குமார் இருந்தாலும் கூட ‛பவர்' அனைத்தையும் பாஜக வசப்படுத்தி உள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அதேவேளையில் என்டிஏ கூட்டணி ஆதரவாளர்கள் கூறுகையில், ‛‛பீகாரை எடுத்து கொண்டால் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் நிதிஷ் குமாருக்காக முதல்வர் பதவியை விட்டு கொடுத்துள்ளது. அதேபோல், உள்துறையை பாஜகவிற்காக நிதிஷ் குமார் விட்டு கொடுத்துள்ளது. கூட்டணி ஆட்சி எனும்போது சில விஷயங்களை விட்டு கொடுக்க வேண்டும். அந்த வகையில் என்டிஏ கூட்டணி சுமூகமாக இலாகாக்களை பிரித்து உள்ளது'' என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications