பாலம் இங்க.. ரோடு எங்க? வயலுக்கு நடுவே அநாதரவாக நிற்கும் பாலம்.. ரூ.3 கோடியாம்! பீகாரில் அதிர்ச்சி!
பாட்னா: பீகார் மாநிலத்தில் சாலையே இல்லாத இடத்தில் வயலுக்கு நடுவே பாலம் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரே மாதத்தில் பீகாரில் 15க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீண்டும் பாலம் ரூபத்தில் பீகாரில் சர்ச்சை வெடித்துள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ராணிகஞ்ச் என்ற ஊரில் வயல் வெளிக்கு நடுவில் 35 அடி நீளத்துக்கு இணைப்பு சாலைகள் இன்றி வெறும் பாலத்தை மட்டுமே அதிகாரிகள் கட்டி உள்ளனர். பசும் வயல் வெளிக்கு நடுவே பாலம் மட்டும் அமைந்திருக்கும் புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், இந்த பாலம் கட்டப்பட்டது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. ராணிகஞ்ச் கிராமத்தில் 2.5 கி.மீ தொலைவுக்கு பரமாந்தபூர் கிராம் வரை முதலமைச்சர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமை பெறவில்லை. விவசாயிகளிடம் இன்னும் நிலம் பெறாத நிலையில், சாலைகளே போடாமல் பாலத்தை மட்டும் கட்டியுள்ளனர்.
நிலம் கையகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் பாலத்தின் நடுப்பகுதியை மட்டும், கட்டி உள்ளனர். ஆனால், அதன் வழியாக இருபுறமும் இருக்க வேண்டிய இணைப்பு சாலைகள் இல்லை. பாலம் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறது. நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே அதிகாரிகள் பாலத்தை கட்டிவிட்டு, மற்ற பகுதிகளில் பணிகளை முடிக்கவில்லை எனத் தெரிகிறது.
ரூ.3 கோடி செலவில் பாலம் மற்றும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டதாகவும், தனியார் நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் இருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழுமையாக நிலம் கையகப்படுத்துதல் முழுமை அடைந்த பின்னர் தான் கட்டுமானப் பணிகள் தொடங்கி இருக்க வேண்டும், ஆனால் பாலம் அமையும் இடத்தின் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டதால், அங்கு பாலத்தைக் கட்டத் தொடங்கி, கட்டி முடித்துள்ளனராம்.
இது குறித்து கிருத்யானந்த் மண்டல் என்பவர் கூறும்போது, “இந்த பாலம் மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இது ஏதேனும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் மேற்கொண்டு எந்த வேலையும் செய்யப்படாமல் அப்படியே கிடக்கிறது. அதனால் தான் இதுகுறித்து கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அராரியா மாவட்ட ஆட்சியர் இனாயத் கான், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதோடு, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருவமழை சமயத்தில் கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்து வந்தன. பீகாரில் பாலங்கள் தொடர்ந்து விழுந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஒரே மாதத்தில் பீகாரில் மட்டும் 15 பாலங்கள் இடிந்து விழுந்தன.
அரசால் மேற்கொள்ளப்படும் பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் தரமாக இருப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கு லஞ்சம் மற்றும் ஊழலே முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பீகாரில் நடு வயலில் கட்டப்பட்ட பாலம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications