Exploring Bihar: பீகார்: நேற்று, இன்று, நாளை.. சந்திரகுப்தரை கட்டுப்படுத்த முடியாத சாணக்கியர்! தோல்வி யாருக்கு?
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் பீகாரில் மௌரிய பேரரசு தோற்றம் பற்றி பேசியிருந்தோம். இன்று, மௌரிய பேரரசர் சந்திரகுப்தரை சாணக்கியரால் கட்டுப்படுத்த முடியாமல் போனதை பற்றி பார்ப்போம்.
இந்தியாவின் முதலில் தோன்றிய பேரரசு மௌரிய பேரரசுதான். அதன் பின்னர்தான் மற்ற பேரரசுக்கள் உருவாகின. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க ஆட்சியை கொடுத்தவர்தான் சந்திரகுப்த மௌரியர்.

மௌரிய பேரரசு உருவாக்கம்
உண்மையில் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர் சாணக்கியர்தான். இவர் வேத மதத்தை (பிராமணியம்) சேர்ந்தவர். பிராமண மதத்தை சேர்ந்த இவரை மதக அரசர்கள் அவமரியாதை செய்ததால், ஆட்சியை கவிழ்க்க உறுதியேற்றார். மகத ஆட்சிக்கு ஏற்கெனவே மக்களிடையே செல்வாக்கு குறைந்த இருந்ததால், சந்திரகுப்த மௌரியரையும், வெளிநாட்டு கூலிப்படைகளையும் பயன்படுத்தி மகத ஆட்சியை கலைத்து, சந்திரகுப்த மௌரியர் மூலம் மௌரிய பேரரசை உருவாக்கினார் சாணக்கியர்.
அர்த்த சாஸ்திரம்
ஒரு பேரரசை எவ்வாறு நிர்வகிப்பது, பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது, இராணுவத்தை எப்படி நடத்துவது மற்றும் அயல்நாட்டுக் கொள்கைகளை எப்படி வகுப்பது, வரி விதிப்பு முறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மௌரியருக்கு, சாணக்கியர் வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கிறார். இந்த வழிகாட்டுதல்களை ஏற்ற மௌரியரும், தனது சாம்ராஜ்ஜியத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்தார். ஆனாலும், மௌரியரை வேத மதம் நோக்கி சாணக்கியரால் நகர்த்த முடியவில்லை. இங்குதான் சாணக்கியர் தோல்வியடைந்தார்.
சாணக்கியரின் தோல்வி
அரசருக்கு என எந்த மதம் இருக்கிறதோ அதுதான் நாட்டில் செழித்து வளரும். இதற்கு முன்னரும் அப்படித்தான் நடந்தது. பாட்டாலிபுரத்தை (இப்போதைய பாட்னா) தலைநகராக கொண்டு வளர்ந்த மதக அரச வம்சம் சமணத்தையும், பௌத்தத்தையும் தங்களது மதமாக ஏற்றுக்கொண்டன. எனவே பீகார் முழுவதும் பௌத்தமும், சமணமும் செழித்து வளர்ந்தது. வேத மதத்தை சேர்ந்த சாணக்கியர், சந்திரகுப்த மௌரியரை வைத்து தனது மதத்தை வளர்த்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை. இதில் சாணக்கியர் தோல்வியடைந்தார்.
கட்டுப்படுத்த முடியாத சந்திரகுப்தர்
ஏனெனில் தான் உருவாக்கிய சந்திரகுப்த மௌரியரை அவரால் வேத மதத்தை தழுவ வைக்க முடியவில்லை. மௌரியர் தனது இறுதி காலத்தில் சமண சமயத்தில்தான் ஐக்கியமானார். இதை வெறும் ஒரு மதமாற்ற நிகழ்வாக மட்டுமே கடந்துவிட முடியாது. ஒரு பேரரசன், ஏன் வேத மதத்தை தழுவாமல் ஏன் சமணம் நோக்கி சென்றான்? என்பதற்கான விடைகள், இந்தியா வரலாற்று ரீதியாக பண்பாட்டு தளத்தில் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான ஆதாரமாக இருக்கிறது.
அரசன் டூ துறவி
சந்திரகுப்தர் அரசனாக இருந்த வரை வேத மதத்தை சேர்ந்த சாணக்கியரின் சீடராகத்தான் செயல்பட்டு வந்தார். போர்கள், கொலைகள், நிலப்பரப்பை ஆக்கிரமித்தல், சூழ்ச்சி, இன்னும் இன்னும் வேண்டும் என்கிற மனப்பான்மையை சந்திரகுப்தர் தனது ஆட்சிக்காலத்தில் பிரதிபலித்தார். போர் வெற்றியை கொண்டாட பசுக்கள் பலியிடப்பட்டன. ரத்தக்கறை படிந்த கையை சந்திரகுப்தர் கழுவ நினைத்தார். அதன் வெளிப்பாடக்தான் அவர் சமண மதத்தை தழுவினார்.
சந்திரகுப்தரின் மரணம்
போர்களை கண்டு அயர்ச்சி அடைந்த சந்திரகுப்தர் தனது மகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு 'பத்ரபாகு' என்பவரின் சீடரானார். பத்ரபாகு என்பவர் ஒரு சமண துறவி. சமணம் அகிம்சையை போதிக்கிறது. அது உயிர் பலியை கேட்பதில்லை. உருவ வழிப்பாட்டிலும் கூட அது நம்பிக்கை கொண்டிருக்கிவில்லை. தான் செய்த அத்தனை கொலைகளுக்கும் பிரயாசித்தம் தேடித்தான் சந்திரகுப்த மௌரியர் சமணம் வந்தடைந்தார். தனது இறுதி நாட்களை கர்நாடகாவில் உள்ள சிரவணபெலகோலாவில் கழித்தார். அங்கு உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார்.
ஒரு பேரரசன் வாழ்ந்து மறைந்த சம்பவமாக இதை பார்ப்பதை விட, இந்திய கலாச்சார, பண்பாடு எந்த வழியாக எல்லாம் பயணித்திருக்கிறது என்பதையே சந்திரகுப்தரின் வாழ்வும், மறைவும் விளக்குகிறது. அந்த வகையில் பீகார் இந்தியாவுக்கு மிகப்பெரிய பண்பாட்டு வெளியை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications