Bihar: இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்கள்! பீகாரில் நல்லாட்சி மீண்டும் அமையும்! நிதிஷ் நம்பிக்கை
பாட்னா: "இன்னும் சில மணி நேர காத்திருப்புக்கு பிறகு பீகாரில் நல்லதொரு அரசு மீண்டும் அமையும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.
பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

அது போல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. இந்த தேர்தலில் 243 தொகுதிகளுக்கு 2616 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிடுகிறார்கள். அது போல் மகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும், ஆர்ஜேடி கட்சி 143 இடங்களிலும் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் பாஜக கூட்டணி சார்பில் நிதிஷ்குமாரும், மகா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவும் முதல்வர் வேட்பாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்படுகின்றன.
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்னும் சில மணி நேர காத்திருப்புக்கு பிறகு பீகாரில் நல்லதொரு அரசு மீண்டும் அமையும் என தெரிவித்துள்ளார். அது போல் தேஜஸ்வி யாதவோ, "கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்தது போல் விதிமீறல்களும் தவறுகளும் நடக்கக் கூடாது. எங்கள் கட்சியினர் விழிப்புடன் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் இருக்கிறார்கள். எந்த அதிகாரியாவது யாருடைய பேச்சையாவது கேட்டுக் கொண்டு அரசியலமைப்பிற்கு எதிராக நடந்தால் பொதுமக்கள் அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
