தொகுதிக்கு 5,765 புதிய வாக்காளர்கள்.. பீகார் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் இளைய தலைமுறை!
பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள், வெற்றிக்கு எந்த அளவுக்கு பங்களிப்பார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு பீகாரில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 14.01 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 11.17 லட்சத்திலிருந்து 14.01 லட்சமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2015ஆம் ஆண்டில் இருந்த 24.13 லட்சம் புதிய வாக்காளர்களை விட இது குறைவாகும். பீகாரில் தேர்தல் போட்டித்தன்மை அதிகரித்து, வெற்றி வித்தியாசங்கள் குறைந்து வருவதால், இந்த புதிய வாக்காளர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

வெற்றி வித்தியாசமும், இளைஞர்களும்
பீகாரில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு சராசரியாக 5,765 புதிய வாக்காளர்கள் இருப்பதாக இந்த ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டில் 4,597 ஆகவும், 2015ஆம் ஆண்டில் 9,930 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2020 சட்டமன்றத் தேர்தலில், 56 தொகுதிகளில் (மொத்த தொகுதிகளில் 23%), தற்போதைய சராசரி புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை (5,765) வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. அந்த ஆண்டில் மாநிலத்தின் சராசரி வெற்றி வித்தியாசம் 16,825 வாக்குகளாக இருந்தது.
வெற்றி வித்தியாசம் என்றால் என்ன?
அதாவது 56 தொகுதிகளில் பல வேட்பாளர்கள் வெறும் 5,765 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். எனவே இளம் தலைமுறை வாக்காளர்கள் ஒன்றாக சேர்ந்து வாக்களித்திருந்தால் இந்த வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசம் மாறுபட்டிருக்கும். 2015ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, 41 தொகுதிகளில் வெற்றி வித்தியாசங்கள் இந்த ஆண்டு புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தன. மொத்த வாக்காளர்களில் புதிய வாக்காளர்களின் பங்கு 2015-ல் 3.61% ஆகவும், 2020-ல் 1.53% ஆகவும் இருந்து, 2025-ல் 1.88% ஆக உயர்ந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
2015 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, 73 தொகுதிகளில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. உதாரணமாக, தாராரி தொகுதியில் CPI(ML)(L) வேட்பாளர் LJP வேட்பாளரை 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது அப்போதைய சராசரி புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையான 9,930ஐ விட மிகக் குறைவு. இந்த 73 தொகுதிகளில் பாஜக 30 இடங்களையும், JD(U) 16 இடங்களையும், RJD 13 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும், மற்ற கட்சிகள் 5 இடங்களையும் வென்றன. 2020ஆம் ஆண்டுத் தேர்தலில், 49 தொகுதிகளில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது.
இளைஞர்களின் பங்களிப்பு
அப்போது JD(U) மற்றும் RJD தலா 13 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், மற்ற கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன. 2015ஆம் ஆண்டில் சராசரி வெற்றி வித்தியாசம் 18,108 வாக்குகளாக இருந்தது. இது அப்போதைய புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு. 2020ஆம் ஆண்டு சராசரி வெற்றி வித்தியாசம் 16,825 ஆகக் குறைந்தது. எனினும், இது அந்த ஆண்டின் சராசரி புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையான 4,597ஐ விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும்.
எனவே இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம், புதிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications