பிரசாந்த் கிஷோர் சர்ச்சை! சொந்த பீகார் மாநிலத்தை காதில் கேட்க முடியாத வார்த்தையில் விமர்சித்த பி.கே!
பாட்னா: ஜான் சுராஜ் தலைவரும், முன்னாள் தேர்தல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரை "உண்மையில் தோல்வியடைந்த மாநிலம்" என்றும் "மிகப் பெரிய பிரச்சினையில் இருப்பதாக" சொல்லி மோசமான வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரது பேச்சுக்குப் பீகார் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பீகாரில் பிரசாந்த் கிஷோர் ஜான் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளது அனைவருக்கும் தெரியும். மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல்களுடன் பீகார் மாநிலத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டன.

அதில் அவரது ஜான் சுராஜ் கட்சியால் எந்தவொரு தொகுதியிலும் இரண்டாவது இடம் கூட பிடிக்க முடியவில்லை. குறிப்பாக ஒரு இடத்தைத் தவிர மற்ற மூன்று தொகுதிகளிலும் டெபாசிட் கூட இழந்தது.
பிரசாந்த் கிஷோர்: இதற்கிடையே பிரசாந்த் கிஷோர் தனது கட்சியின் அமெரிக்கப் பிரிவைத் தொடங்கினார். அப்போது அமெரிக்காவில் உள்ள பீகார் மாநில புலம்பெயர்ந்த மக்களிடம் காணொலி மூலம் உரையாற்றிய பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். 2025 சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் தங்கள் கட்சி வெல்லும் எனக் குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், பீகார் அரசியலில் பல்வேறு சவால்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மிக மோசமான வார்த்தை: பீகார் நிலை பரிதாபமாக இருக்கிறது என்பதை மிகவும் மோசமான வார்த்தையில் குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர் மேலும் பேசுகையில், "இதை நாம் உணர வேண்டும். பீகார் ஒரு நாடாக இருந்தால்.. அது மக்கள்தொகை அடிப்படையில் உலகில் 11வது பெரிய நாடாக இருந்து இருக்கும். மக்கள் தொகை அடிப்படையில் ஜப்பானை விடப் பெரிய மாநிலமாக இருந்து இருப்போம்.
பெரும் போராட்டம் பீகார் மாநிலத்தில் மக்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இதனால் அவர்களால் வளர்ச்சி குறித்தெல்லாம் யோசிக்கவே முடிவதில்லை. உதாரணமாக சூடான் நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு மக்கள் ஏன் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் போரிடுகிறார்கள்? ஏனென்றால் தோல்வி அடைந்து மிக மோசமான நிலையில் இருக்கும் போது மக்கள் வளர்ச்சி குறித்துக் கவலைப்படுவதில்லை.
மாற்றம் வரும்: குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. யாரைச் சுட்டுக் கொல்லலாம்.. யாரைக் கடத்தலாம் என்பதே அவர்கள் யோசனையாக இருக்கிறது. பீகார் மாநிலத்திலும் கிட்டதட்ட அதுபோன்ற ஒரு சூழல் தான் இருக்கிறது. ஆனாலும், இங்கு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜான் சுராஜ் மேற்கொண்ட களப் பணிகள் இறுதியில் பலன் கிடைக்கும் என நம்புகிறேன். 2029- 2030 ஆண்டுக்குள் பீகாரை நடுத்தர வருமானம் கொண்ட மாநிலமாக மாற்றுவதற்கு நீண்ட நேரம் மற்றும் நிலையான முயற்சி தேவைப்படும் என்பது எனக்குப் புரிகிறது.
பீகார் மாநிலத்தில் வளர்ச்சியைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. 2025இல் ஜான் சுராஜ் ஆட்சியை அமைக்கும் போது பள்ளிக் கல்விக்கே அதிக முக்கியத்துவம் தருவோம்.
மது விலக்கை அகற்றுவோம்: பீகார் மாநிலத்தில் இப்போது மாநிலம் முழுக்க மதுவிலக்கு இருக்கும் நிலையில், அதை அகற்றுவோம். இதன் மூலம் கிடைக்கும் நிதியை நாங்கள் கல்வியை மேம்படுத்தப் பயன்படுத்துவோம். ஏனென்றால் தற்போது மதுவிலக்கு பெயரளவில் மட்டுமே அமலில் இருக்கிறது. இதனால் எந்தவொரு பயனும் இல்லை. எனவே, அதை அகற்றினால் கிடைக்கும் நிதியை இதுபோன்ற நல்ல திட்டங்களுக்காவது பயன்படுத்தலாம். நாங்கள் பீகாரில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என முயல்கிறோம். அதற்குத் தயவு செய்து உங்கள் ஆதரவை எங்களுக்குக் கொடுங்கள்.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்ற போதிலும் 2025இல் ஜன் சுராஜ் நிச்சயம் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனக்குத் தேர்தல் எப்படிப் போகும் என்ற ஒரு அடிப்படை புரிதல் இருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் போது நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications