பிரசாந்த் கிஷோர் அதிரடி.. பீகார் சட்டசபை தேர்தலில் கதிகலங்கி நிற்கும் பாஜக + காங்கிரஸ்.. என்னாச்சு?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ‛ஜன் சுராஜ்' கட்சி சார்பில் மாநிலத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பீகாரில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரசாந்த் கிஷோர் ஓட்டுகளை பிரிப்பார் என்பதால் பாஜக - காங்கிரஸ் கூட்டணி கதிகலங்கி உள்ளது.
பீகாரில் தற்போது பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் மதசார்பற்ற ஹிந்துஸ்தானி அவா மோர்ச்சா (எச்ஏஎம்எஸ்) கட்சிகள் உள்ளன. பாஜகவுக்கு அதிக எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தான் முதல்வராக உள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சிகள் சார்பில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. வரும் அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மாநிலத்தில் தற்போது இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் அப்படியே களமிறங்குகின்றன.
இதனால் இருமுனை போட்டி நிலவும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி உள்ளது. மாநிலத்தில் மும்முனை போட்டி ஏற்படுகிறது. பீகாரை மையப்படுத்தி தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ‛ஜன் சுராஜ்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அந்த கட்சி மாநிலத்தில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். அதாவது பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேசிய செயற்குழு கூட்டத்தை நேற்று நடத்தினார். இந்த கூட்டத்தில் தான் பீகாரில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பெயர் பட்டியல் 4 முதல் 5 கட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 40 தனி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
இதுதவிர தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக மூத்த வழக்கறிஞர் பசண்ட் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய தலைவர், மாநில தலைவர்களுடன் இணைந்து தேர்தல் அறிக்கையை தயார் செய்ய உள்ளார். அதேபோல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications