நெகிழ்ந்து போன சீக்கியர்கள்.. தன் கையால் உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி! பாட்னாவில் சம்பவம்
பாட்னா: லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகாரில் சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

இதனையடுத்து இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அதாவது, ஆந்திரா (25 தொகுதிகள்), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப் பிரதேசம் (13), மேற்குவங்கம் (8) ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் பீகார் மாநிலம் மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொரு முறையும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும்போதும், மிகவும் கவனம் பெறும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் இருக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களை சேர்த்தால் மொத்தம் 120 தொகுதிகளை அள்ளிவிடலாம்.
எனவே வெற்றியை வசப்படுத்த நினைக்கும் கட்சிகள் இரண்டு மாநிலங்களில் பெரும் கவனம் செலுத்தும். இந்த முறையும், பாஜக vs இந்தியா கூட்டணி பல்வேறு வியூகங்களுடன் களமிறங்கியுள்ளன.
உ.பியில் பாஜகதான் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என்பது தெரிந்த கதை. ஆனால் பீகாரின் சூழல் வேறு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்தான் இங்கு கோலோச்சி வருகிறது. ஆனால், நிதிஷ்குமாரின் அரசியல் நிலைப்பாடு மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பாஜவிலிருந்து விலகி, காங்கிரசுடன் கைகோர்த்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது, பின்னர் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தது, காங்கிரஸை எதிர்த்தது என இழுக்கும் பக்கமெல்லாம் சென்று, நிலையற்றவராக நிதிஷ்குமார் மாறியிருக்கிறார். எனவே இதனை பயன்படுத்தி, பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் அமைத்திருக்கும் மகாபந்தன் கூட்டணி வாக்குகளை கைப்பற்ற நினைக்கிறது.
இருப்பினும் இதற்கு பாஜக கடுமையாக டஃப் கொடுத்து வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடியின் செயல்பாடு பாஜகவுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. அதாவது இன்று காலை பீகாரில் சீக்கியர்களுக்கு பிரதமர் மோடி உணவு சமைத்து பரிமாரியிருக்கிறார். பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா சென்ற மோடி, அங்கு வழிபாடு செய்துவிட்டு சீக்கியர்களுக்கு உணவு தயாரித்து அதனை தனது கைகளால் பரிமாரியிருக்கிறார்.
இன்று அம்மாநிலத்தில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கும் நிலையில், இவருடைய இந்த செயல், பாஜகவுக்கு சீக்கியர்களின் ஓட்டை ஓரளவுக்கு கொண்டு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் பிறந்த இடமாக இந்த குருத்வாரா கருதப்படுகிறது. எனவே 18ம் நூற்றாண்டில் அவருக்கான புனித தலம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டது. இன்று காலை இங்கு வழிபாடு நடத்திய மோடி பின்னர் உணவு சமைத்து பரிமாரியுள்ளார்.












Click it and Unblock the Notifications