சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ,960 கோடி டெபாசிட்.. உற்சாகத்தில் பெற்றோர்.. திகைப்பில் வங்கி அதிகாரிகள்
பாட்னா : பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வங்கி அதிகாரிகள், கணிணியில் 960 கோடி ரூபாய் இருப்பு இருப்பதாக காட்டுவது எப்படி என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
அண்மையில் இதேபோன்று பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவரது வங்கி கணக்கிற்கு ரூ. 5லட்சம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பணத்தை அவர் உடனடியாக எடுத்து செலவு செய்துவிட்டார்.
அந்தப் பணத்தைத் திருப்பி அனுப்ப வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பிய நிலலையில் பணத்தை திருப்பி செலுத்த அவர் முன்வரவில்லை. இதையடுத்து, வங்கி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. புகாரின் பேரில் ரஞ்சித் தாஸை போலீசார் கைது செய்தனர்.

5 லட்சம்
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், "பிரதமர் மோடி ரூ.15 லட்சம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார். அதில் முதல் தவணையாக ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தார் என நினைத்து எடுத்துச் செலவு செய்தேன்" என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் உண்மையை விளக்கி பணத்தை திரும்ப வாங்க முயற்சி செய்து வருகிறார்கள்.

சிறுவர்கள் கணக்கு
இந்த சூழலில் தான் பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்னும் மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கதிஹார் மாவட்டம், பாஸ்தியா என்ற கிராமத்தைச் சேர்ந்த குருச்சந்திர விஸ்வாஸ், ஆசித் குமார் ஆகிய இரண்டு சிறுவனர்களுக்கு பள்ளியின் சார்பில் கிராம வங்கியில் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் திடீரென நேற்று முன்தினம் இரவு ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ள்து.

செல்போனில் எஸ்எம்எஸ்
வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் ஆனது குறித்து செல்போனில் வந்த தகவலையடுத்து, இரு சிறுவர்களும் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.. இதைபார்த்து திகைத்துப்போன பெற்றோர் ஏடிஎம் சென்று வங்கியின் கணக்கு குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.

பெற்றோர் தகவல்
அப்போது, இதில் ஆசித் குமார் கணக்கில் ரூ.60 கோடியும், குருச்சந்திர விஸ்காஸ் கணக்கில் ரூ.900 கோடியும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர் உடனடியாக வங்கிக்குச் சென்று இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்கள். வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து ஆய்வு செய்தபோது, கணக்கில் குறைந்தபட்ச பணம் மட்டுமே இருந்தது, ஆனால், கணினியின் கணக்கில் ரூ.900 கோடி காட்டியது கண்டு குழம்பி போயினர்.

கணக்கில் குறைவான பணம்
வங்கியின் கணினிச் செயல்பாட்டு முறையில் சில கோளாறுகள் நடந்திருக்கலாம் என வங்கியின் மேலாளர் கூறினார். சிறுவர்களின் கணக்கில் குறைவான பணம் இருக்கிறது. ஆனால், கணினியின் கணக்கில் ரூ.960 கோடி காட்டுகிறது என்று வங்கி மேலாளர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications