உள்ளதும் போச்சா.. வேலுமணி டீமுக்கு வேட்டு வைத்த விஜய்! மினிஸ்டர் பட்டியலில் மிஸ்ஸான மாஜிகள்! சோகம்
சென்னை: தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு வழங்கிய அதிமுக அதிருப்தி அணியினரை அமைச்சரவையில் சேர்ப்பது தொடர்பாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் அதிருப்தி அதிகரித்த நிலையில், தற்போது வெளியான அமைச்சரவை பட்டியலில் அதிமுகவினர் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்தபோது முழுமையான பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவு முக்கியமாக இருந்தது. இதனால், கம்யூனிஸ்ட்கள், விசிக ஆதரவோடு தவெக ஆட்சி அமைந்தது.

அந்த நேரத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அமைச்சரவை விரிவாக்கம்
இந்த ஆதரவுக்கு பதிலாக அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்ற நம்பிக்கை அந்த தரப்பினரிடம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தவெக வட்டாரங்களில் இதற்கு ஒருமித்த கருத்து இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக விஜயின் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் சில முக்கிய அமைச்சர்கள், அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்ப்பதில் விருப்பமில்லாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
அதிமுக அதிருப்தி அணி
இதனால் ஆரம்பத்தில் அதிமுக அதிருப்தி அணியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், பின்னர் அந்த பேச்சுவார்த்தைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் பல அமைச்சர்பதவிகள் குறித்து பேச்சு நடந்ததாகவும், பின்னர் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஊழல் வழக்குகளில் பெயர் உள்ள சில முன்னாள் அமைச்சர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு சண்முகம் - வேலுமணி தரப்பு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
தவெக அரசு
இதற்கிடையில், தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வரும் திமுக கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள், "அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்" என்ற வகையில் அழுத்தம் கொடுத்தது.
அமைச்சரவை விரிவாக்கம்
ஒரு பக்கம் ஆட்சியை நிலைநிறுத்த அதிமுக அதிருப்தி அணியின் ஆதரவு தேவைப்படுகிற சூழல் இருக்க, மற்றொரு பக்கம் கூட்டணி கட்சிகளின் அதிருப்தியையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் உருவானது.
அதேநேரத்தில், அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்றால் ஆதரவு அளித்து வரும் அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே திரும்பிச் செல்லக்கூடும் என்ற அச்சமும் தவெக தரப்பில் இருந்தது.
விஜய்
அதனால் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதில் விஜய் தரப்பு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அமைச்சரவையில் அதிமுகவை சேர்க்க கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையே தற்போது அமைச்சரவை விரிவாக்க பட்டியல் வெளியாகி உள்ளது.
அமைச்சர்கள் பெயர்
அதில் தூத்துக்குடி ஸ்ரீநாத், அவிநாசி கமலி, குமாரபாளையம் விஜயலட்சுமி, கடலூர் ராஜ்குமார், ஸ்ரீரங்கம் ரமேஷ், மேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 21 பேர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைகிறது.
சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி
அதே நேரத்தில் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கையை விஜய் ஏற்று கொண்டே அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உடன் சண்டை போட்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தங்கள் பெயர்கள் அமைச்சரவை பட்டியலில் இடம் பெறாததால் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications