பாஜக + நிதிஷ்குமார்! அரசியல் சலசலப்புகளுக்கு இடையே.. இன்று பீகாருக்குள் நுழைகிறது ராகுலின் யாத்திரை
பாட்னா: பாஜகவுக்கு எதிரான கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து பீகார் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்நிலையில் இன்று இம்மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜடோ நியாய யாத்திரை நுழைகிறது.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்கொண்டிருந்த இடர்பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமைக்கு எதிராக புகார்களை எழுப்பியது, மூத்த தலைவர்களின் விலகல், பாஜகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகிகள் என காங்கிரஸ் தனது மொத்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வந்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் பாரத் ஜடோ யாத்திரை கட்சியின் தொண்டர்களுக்கு காங்கிரஸ் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்கள் ராகுல் காந்தியுடன் வீதியிறங்கி நடந்தார்கள். களப்பணியில் ஈடுபட்டார்கள், 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தன்னை வளர்த்துக்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டது. அதன் அங்கமாக தொண்டர்கள் இருந்தார்கள். இந்நிலையில் 'பாரத் ஜடோ நியாய யாத்திரை' என இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.
இந்த யாத்திரை மணிப்பூரில் தொடங்கி மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்ற தொகுதிகள் என 67 நாட்கள் நீள்கிறது. இறுதியாக மகாராஷ்டிராவின் மும்பையில் முடிவடைகிறது. சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடந்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடக்கிறார்.
பயண திட்டத்தின்படி மணிப்பூர், நாகலாந்து, அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் யாத்திரையை முடித்த அவர், இன்று பீகார் மாநிலத்தில் நுழைகிறார். பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ராகுல் யாத்திரை மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உருவாக்கினார். ஆனால், தற்போது பாஜகவுடன் கைகோர்த்து பீகாரின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கிறார்.
“எங்கு இருந்தேனோ அங்கே மீண்டும் திரும்பி வந்திருக்கிறேன். இனி அணிமாறும் பேச்சுக்கே இடமில்லை. கட்சியின் நிர்வாகிகள், நலம் விரும்பிகள் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில்தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்” என்று பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். இந்த சூழலில்தான் ராகுல் காந்தியின் யாத்திரை இன்று பீகாருக்குள் நுழைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications