வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
புதுச்சேரி: உடல் பருமனை குறைக்க, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை கிசிச்சை எடுத்துக் கொண்ட புதுச்சேரி இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்தார். அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் ஹேமச்சந்திரனுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
உலகம் முழுவதுமே மாறி வரும் பழக்க வழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதுமே 100 கோடி பேருக்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

மருத்துவ இதழான 'லான்செட்'டில் ஒரு முறை வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, உலகளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட 100 கோடிக்கும் அதிகமான மக்களில், 88 கோடி பேர் பெரியவர்கள், 15 கோடியே 90 லட்சம் பேர் குழந்தைகள் ஆவர். உடல் பருமன் காரணமாக இதய நோய், வகை 2 நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் கலோரி குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றினால், உடல் எடையை உடனே குறைக்க முடியாவிட்டாலும், மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பலரும் உடல் எடையை உடனே குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்கிறார்கள். அதில் ஆபத்து ஏற்பட்டு மரணம் கூட ஏற்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன் என்பவர் மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் (26 வயது) உள்ளனர். இந்த இரண்டு பேரில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனராக வேலை செய்து வந்தார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் முடித்துவிட்டு பணியாற்றி வருகிறார்.
இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் அதிகம் உள்ளவர். இவர் தனது உடல் பருமனை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக பல்வேறு இடங்களை தேடி வந்தவர், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தாராம்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால்
அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவத்தனர்.
இதையடுத்து கதறி அழுததுடன், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடல் எடையை குறைக்க அறுவை கிசிச்சைகள்: மிக அதிகமான உடல் பருமன் உள்ளவர்களுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (bariatric surgery) மூலம் உடல் பருமனைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதே போல் என்டோபேரியாட்ரிக் (endobariatric) சிகிச்சைகளும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன சிகிச்சை என்றால், வாய்வழியே ஒரு குழாய் செலுத்தி வயிற்றில் ஒரு பலூன் வைப்பார்கள். அது வயிற்றின் ஒரு பகுதியை இது நிரப்பிக்கொள்ளும், அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ள முடியாது. இதன்மூலம் உடல் எடை கட்டுக்குள் வந்ததும் பலூன் அகற்றப்படும்," என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications