துணை ஜனாதிபதி பேசும்போது திடீரென அலறிய அலாரம்.. ஒரு நொடி பதறிய அதிகாரிகள்! என்ன நடந்தது
புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் இப்போது 3 நாள் அரசு முறை பயணமாகப் புதுச்சேரிக்கு வந்துள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசி வருகிறார். இதற்கிடையே புதுச்சேரி ஜிம்பரில் அவர் பேசிக் கொண்டு இருந்த போது திடீரென அலாரம் அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் அரசு முறை பயணமாகப் புதுச்சேரிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார். அவருக்குப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

ஜெகதீப் தன்கர்
புதுச்சேரியில் 3 நாட்கள் ஜெகதீப் தன்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே இன்றைய தினம் அவர், புதுச்சேரி ஜிப்மரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தன்கர் மேடையில் பேசிக் கொண்டு இருக்கும்போதே திடீரென அலாரம் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
"தேசத்தைக் கட்டி எழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை" என்ற தலைப்பில் ஜிப்மரில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜகதீப் தன்கர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஆர். செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது ஜெகதீப் தன்கர் ஜிப்மர் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பேசி கொண்டி இருந்தார். மாணவர்களும் அவரது பேச்சை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
திடீரென அலறிய அலாரம்
அப்போது திடீரென அங்கு அலாரம் அலறியது.. பீப் பீப் என்று தொடர்ச்சியாக பையர் அலாரம் சத்தத்தை எழுப்பியது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டக்கென தனது பேச்சை நிறுத்திய குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், இது தனக்கான சிக்னலா எனக் கேட்டார். அதற்கு ஜிப்மர் அதிகாரி ஒருவர் இல்லை எனக் கூற குடியரசுத் தலைவர் தனது பேச்சை தொடர்ந்தார். அதாவது தான் பேச்சை முடிக்க வேண்டும் என்பதற்கான சிக்னலா என விளையாட்டாகக் கேட்டார். இதனால் அங்குச் சிரிப்பலை எழுந்தது.
என்ன காரணம்
இந்த விழாவின் துவக்கத்தில் ஏற்றப்பட்ட குத்து விளக்கில் லேசான புகை வந்ததால் பையர் அலாரத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுந்ததாகத் தெரிகிறது.. இருப்பினும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. துணை ஜனாதிபதி பேசும்போது இதுபோல எழுந்த சத்தத்தால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
துணை குடியரசுத் தலைவர் பேச்சு
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெகதீப் தன்கர், "இப்போது டிஜிட்டல் வளர்ச்சி கிராமங்கள் வரை சென்றுவிட்டன.. இதனால் கிராமப்புற மக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். இதுபோல பல்வேறு நடவடிக்கைகளால் சர்வதேச பொருளாதாரத்தில் தற்போது இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 3ஆவது இடத்திற்கு விரைவில் வருவோம்.
2 மாதத்திற்கு முன்பு தீவிரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தினர். அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் ஒரு சாமானிய மக்கள் கூட கொல்லப்படவில்லை. தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் உலகளவில் ஒரு அங்கீகாரத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications