மின்கம்பத்தில் பழுது பார்த்த சங்கர்... ஏணி போட்டு ஏறி வெட்டி சாய்த்த 8 பேர் கொண்ட கும்பல்!
புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள கோட்டக்கரை பகுதியில் சங்கர் என்பவரை 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியான கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் ஆரோவில்லில் ஒப்பந்த அடிப்படையில் தச்சு வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சங்கர் வீடு அமைந்துள்ள பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கர் அருகிலிருந்த மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு நான்கு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல் சங்கரை கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர்.
அந்த கும்பலை கண்டு பயந்துபோன சங்கர், மேலே இருந்தவாறே உதவி கேட்டு அப்பகுதியில் இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்துள்ளார். ஆனால் அந்த கும்பலிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்ததால் யாரும் உதவி செய்ய முன் வராமல் பயந்து ஓடினர்.

இதனையடுத்து அருகில் இருந்த ஏணியை எடுத்து வந்து மின் கம்பத்தின் மீது சாய்த்த அந்த கும்பல், ஏணி மீது ஏறி சங்கரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் சங்கர் நிலை தடுமாறி கீழே விழுந்து, துடிதுடித்து உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சங்கரின் உடலை கைப்பற்றி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சங்கர் கடந்த வாரம் அதேபகுதியில் உள்ள சிலருடன் சண்டையிட்டு உள்ளதாகவும், அதனால் அவர்கள் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் ஊருக்கு நடுவே வாலிபர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications