வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் 'ட்விஸ்ட்’.. டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. பெரும் பரபரப்பு!
புதுக்கோட்டை : வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க டிஎன்ஏ டெஸ்ட் நடத்த அனுமதி கிடைத்த நிலையில், ரத்த மாதிரி பரிசோதனைக்கு வருகை தர 8 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ரத்த மாதிரி கொடுக்க வருமாறு 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 3 பேர் மட்டுமே வந்த நிலையில், 8 பேர் ரத்த மாதிரி தர வராதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேங்கைவயல் கொடூரம் : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை கலந்தனர். அந்த டேங்க்கில் இருந்து வரும் குடிநீரை குடித்தவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, அந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
டிஎன்ஏ பரிசோதனை : இந்த விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதையடுத்து நீதிமன்றம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி வழங்கியது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க, இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில பயிற்சி காவலர் முரளி ராஜா, இறையூர் மற்றும் கீழ முத்துக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் என மூவர் மட்டுமே இன்று டிஎன்ஏ பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகினர்.

வர மறுத்த 8 பேர் : அவர்களிடம் மட்டும் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மற்ற எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட மூவரின் ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
டிஎன்ஏ பரிசோதனை மூலம் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரத்த மாதிரி கொடுப்பதற்கு 8 பேர் வர மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்றும் அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications