நிற்க முடியாத போதை! தள்ளாடி வகுப்பறைக்குள் திடீரென புகுந்த ஆசாமி! பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை, வகுப்புக்குள் அத்துமீறி நுழைந்து, குடிபோதையில் இருந்த நபர் கடுமையாக தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'மது' என்னும் தீய பழக்கத்துக்கு அடிமையாகும் நபர்கள், தங்களையும் வருத்திகொண்டு, பிறருக்கும் ஏதாவது வகையில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.
மதுபோதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் சிலர் செய்யும் விரும்பதகாத சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். அப்படியொரு சம்பவம், புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த சித்திரா தேவி என்பவர், ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை என்னும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல், பள்ளிக்குச் சென்ற ஆசிரியை சித்திரா தேவி, அங்கு வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆசிரியை மீது தாக்குதல்
இந்நிலையில், வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர், மதுபோதையில் பள்ளிக்குள் நுழைந்துள்ளார். மேலும், அவர் ஆசிரியை சித்திரா தேவி பாடம் எடுத்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ஆசிரியை சித்திரா தேவியின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த சித்திரா தேவி செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். மேலும், அந்த நபர், ஆசிரியை சித்திரா தேவியை, தகாத வார்த்தைகள் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததோடு, மறுபடியும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் அதிர்ச்சி
பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை, மதுபோதையில் வந்த சித்திரைவேல் கடுமையாக தாக்கியதால், பள்ளியில் பாடம் கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, வகுப்பறையில் 26 மாணவர்களும், பள்ளியின் தலைமை ஆசிரியையும் இருந்துள்ளனர். எதற்காக ஆசிரியையை, அந்த நபர் தாக்கினார் என தெரியாமல் அனைவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்
இதனையடுத்து, மதுபோதையில் ஆசிரியை தாக்கிய சித்திரவேலை, பள்ளியின் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர், குண்டு கட்டாக தூக்கிச் சென்ற வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பாக தாக்குதலுக்கு ஆளான பள்ளி ஆசிரியை சித்திரா தேவி, உடனடியாக வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆசிரியை அளித்த புகாரின் பேரில், போலீசார் சித்திரைவேல் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியையை, மதுபோதையில் அத்துமீறி நுழைந்த நபர், மாணவர்கள் மத்தியில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications