தவெகவுடன் அதிமுக கூட்டணியா? எடப்பாடி தான் யோசிச்சு பார்க்கணும்.. நயினார் நாகேந்திரன் சொன்ன மேட்டர்!
புதுக்கோட்டை: ஒரு தேர்தலைக் கூட சந்திக்காதவர்களுடன் கூட்டணி ஏற்படலாம் என சொல்பவர்கள்தான் யோசிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக உடன் கூட்டணி அமைப்பது பற்றி சூசகமாக பேசி வருவது பற்றிய கேள்விக்கு நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் நயினார் நாகேந்திரன். அப்போது, அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னொரு பெரிய கட்சி இணையப் போகிறது என்றும் மெகா கூட்டணி அமையப் போகிறது என்றும் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படலாம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்துக்கு அதிமுக தான் தலைமை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அதேநேரத்தில் ஒரு பொதுத் தேர்தலைக் கூட சந்திக்காதவர்களுடன், ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாதவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்பது போன்ற பெரிய வார்த்தைகளைப் பேசலாமா என்பதை அவர்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். அதிமுகவும், பாஜகவும் ஒரு குடையின் கீழ் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறோம். தமிழகத்திலும் நல்லாட்சி மலர வேண்டும்." என்றார்.
மேலும் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் பற்றிப் பேசிய அவர், "அமைச்சர் சேகர்பாபு நல்ல நண்பர்தான். எனது பதவி மியூசிக்கல் சேர் என்கிறார். எனது பதவி 3 ஆண்டுகள் தான். ஆனால் அவரது அமைச்சர் பதவி இன்னும் 3 மாதங்கள் தான்." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுக கட்சியில் பிளவு எதுவும் ஏற்படவில்லை. செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். எங்களை நம்பி வந்த ஓபிஎஸ், டிடிவி ஆகியோரைக் கைவிட்டுவிட்டதாக கேட்கிறீர்கள். அவர்களாகத்தான் வெளியே சென்றார்கள். மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்பதை காலம் தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications