50 கிலோ பலாப்பழம் vs சாதாரண பலா… ₹2500 வரை ஏலம் போன ரகசியம் என்ன? புதுக்கோட்டையில் நடந்த அதிரடி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் செம்மண் பூமியில் விளையும் பலாப்பழங்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. அந்த வகையில், தற்போது ஒரு தனித்துவமான பலாப்பழம் ஏலத்தில் 2,500 ரூபாய்க்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்திதான் தற்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் விளையும் பலாப்பழங்கள், அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் நிறத்திற்காக "புதுக்கோட்டை பலா" என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்றன. இதற்கு சுற்றுவட்டாரம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் நல்ல கிராக்கி உள்ளது.

புதுக்கோட்டை பலா
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலா உற்பத்தி என்பது ஒரு பிரதான தொழிலாகவே மாறிப்போயுள்ளது. இந்தப் பகுதிகளில் பலா மரம் இல்லாத வீடுகளே இல்லை எனும் அளவுக்கு மக்கள் ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர்.
தோப்புகளாக மட்டுமன்றி, விவசாய நிலங்களின் வரப்பு ஓரங்களிலும் பலா மரங்கள் செழித்து வளர்கின்றன. இங்கு விளையும் நாட்டுப் பலாப்பழங்கள் சென்னை கோயம்பேடு முதல் மும்பை வரை உள்ள சந்தைகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
100 டன் பலாப்பழங்கள்
சமீபத்தில் நடைபெற்ற எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு, கீரமங்கலம் பகுதியில் இருந்து மட்டும் சுமார் 100 டன் பலாப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் உற்பத்தியாகும் பழங்கள் கீரமங்கலம், அணவயல், கைகாட்டி, பனங்குளம் போன்ற இடங்களில் உள்ள ஏலக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த ஏலக்கடைகளில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும், இன்று நடைபெற்ற ஏலம் சற்று வித்தியாசமாக அமைந்தது.
ஒரு பலாப்பழம் - 50 கிலோ
தற்போது கீரமங்கலத்தில் உள்ள ஒரு ஏலக்கடைக்கு, கீரமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிவண்ணன் என்பவர் ஒரு பிரம்மாண்டமான பலாப்பழத்தைக் கொண்டு வந்தார். அந்த ஒரு பழம் மட்டும் சுமார் 50 கிலோ எடை கொண்டிருந்ததாம்.. இதை பார்த்தவுடன் ஏலக்கடையில் இருந்த வியாபாரிகள் மத்தியில் ஆச்சரியமும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே அந்தப் பழத்தை வாங்குவதற்கு பலரும் ஆர்வத்துடன் திரண்டு குவிந்துவிட்டார்கள்.. இதனால் அதுவரை சாதாரணமாக நடந்து கொண்டிருந்த ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்தது.
2500 ரூபாய்க்கு ஏலம்
கடைசியாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு வியாபாரி கடும் போட்டிக்கு இடையே அந்த ஒற்றைப் பலாப்பழத்தை 2,500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இந்த ஆண்டு இதுவரை விற்பனையான பலாப்பழங்களிலேயே இதுதான் மிக அதிக விலைக்குப் போன பழம் என்று ஏலக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக, கொஞ்சம் எடை குறைவாக இருந்த மற்ற பலாப்பழங்கள் தலா ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின.
புதுக்கோட்டை மண்ணின் தன்மைக்கும், அந்த மண்ணில் விளையும் நாட்டுப் பலாவுக்கும் உள்ள மவுசு குறையவில்லை என்பதற்கு இந்த ஏலமே ஒரு சான்றாக அமைந்துள்ளது. சுவை மற்றும் தரத்தில் சிறந்த இந்தப் பகுதி பலாப்பழங்களுக்கு வெளிமாநிலங்களிலும் தேவை அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஏலச் செய்திதான் இப்போது சமூக வலைதளங்களிலும், உள்ளூர் விவசாயிகளிடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது...!!!












Click it and Unblock the Notifications