சிந்தாமல், சிதறாமல்.. மேற்கூரையை அப்படியே அலேக்காக தூக்கி சென்ற பெண்கள்.. வாவ்!
புதுக்கோட்டை: ஒரே நாளில் ஒரு கட்டிடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா? அதுவும் முற்றிலும் பெண்களால்... நம்பித்தான் ஆகணும். புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கீரமங்கலம் அருகில் உள்ள கிராமம் மறமடக்கி. இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் இந்த பள்ளி ரொம்ப ஃபேமஸ் ஆனது.
பொது தேர்வு என்று வந்துவிட்டால், மாணவர்கள் சாதித்து காட்டி விடுவார்கள். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை, இந்த ஸ்கூலில், வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அதனால் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது.

ரூ.2 கோடி நிதி
தற்போது, இதற்கு தீர்வும் கிடைத்துள்ளது. அதாவது, 10 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட ஒரே கட்டிடமாக கட்டுவதற்காக நபார்டு நிதி சுமார் ரூ. 2 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்தது.

பழைய ஓட்டு கட்டிடம்
ஆனால் திரும்பவும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. புதிய கட்டிடம் கட்ட முடிவாகி விட்டது, ஆனால் அந்த கட்டிடம் கட்ட தேர்வு செய்த இடத்தில், 60 அடி நீளமுள்ள ஓட்டு கட்டிடம் இருந்தது. பழைய ஓட்டு கட்டிடம்தான். ஆனால் அது நல்ல நிலையில் இருந்தது.

ஓடுகளை அகற்ற முடிவு
நல்லா இருப்பதை எப்படி இடிப்பது? ஆனால் அகற்றினால்தான் புதிய கட்டிடம் கட்டவே முடியும் என்ற நிலை உருவானது. பழைய ஓட்டுக் கட்டிடத்தை உடைத்து, வேறு இடத்தில் வைத்தாலும் அதிக செலவாகும். அதனால், கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்ட ஓடுகளை மட்டும் அகற்றலாம் என முடிவானது.

மரச்சட்டங்கள்
அதாவது, பழைய ஓட்டு கட்டிடத்தை உடைக்காமல், ஓடுகளை மட்டும் பிரித்து மரச்சட்டங்களை அப்படியே தூக்கி மாற்று இடத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த மரச்சட்டங்களோ 60 அடி நீளமுடையது. இந்த மேற்கூரையை அகற்ற 100 நாள் வேலையின் கீழ் பெண்கள் முன்வந்தனர்.

வகுப்பறை கட்டடம்
அவர்களின் உதவியுடன் மேற்கூரை தூக்கப்பட்டது. அதாவது 200 அடி தூரத்திற்கு இதனைப் பெண்கள் அப்படியே அழகாக, குழந்தையை தூக்கிச் செல்வது போல சுமந்து வந்தனர். மீண்டும் அதே 60 அடி நீளத்தில் ஓட்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது. ஒரே நாளில் ஒரு கட்டிடம் மாற்றி அமைக்கப்பட காரணமாக இருந்த அப்பெண்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications