தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவா? ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
புதுக்கோட்டை: தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
1975-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ஐசிடிஎஸ்) மூலம் மத்திய அரசு அங்கன்வாடி மையங்களை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்க வேண்டும் என்பதற்காகவும், தேவையான ஊட்டச்சத்து, அடிப்படைக் கல்வி, ஆரோக்கியமாக வளர்வதற்கான சூழலை ஏற்படுத்துதல், , வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இம்மையங்கள் மூலம் நாப்கின், சத்துமாவு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கன்வாடிகள் சத்துணவு மையங்களாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை குறைக்க போவதாக அங்கன்வாடி மைய ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் குழந்தைகள், வளர் இளம்பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இம்மையங்களை குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் அளித்த பேட்டியின் படி, தமிழகத்தில் மொத்தம் சுமார் 52 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் இருப்பதாகவும் இதில், குறைந்த தொலைவில் உள்ள 2 மையங்களை ஒன்றிணைப்பது, 10 குழந்தைகளுக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மையங்களை மூடுவது போன்ற பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 10 முதல் 15 குழந்தைகள் உள்ள மையங்கள் மினி மையங்களாக்கப்படுவதாகவும் அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் மையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, குழந்தைகள் இல்லாத நிலையில் உள்ள மையங்கள், அருகே உள்ள மையத்துடன் இணைக்கப்படுவதாகவும், எண்ணிக்கையில் குறைவான குழந்தைகளுடன் செயல்படும் மையங்கள் மினி மையங்களாக மாற்றப்படுவதாகவும் கூறினார்கள்.
15 குழந்தைகளுக்கு மேல் உள்ள மையங்களில் 2 அங்கன்வாடி பணியாளர்களும், குறைவாக உள்ள மையங்களில் ஒரு பணியாளரும் பணிபுரிவர் என்றும் இவை அனைத்துமே நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ஒருபுறம் எனில் குழந்தைகள் அதிகம் வரும் பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையங்களும் ஆங்காங்கே திறக்கப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அதேபோல் அங்கன்வாடி மையத்தில், ஆறு மாதம் முதல், ஆறு வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் அங்கன்வாடி மையங்கள் பல லட்சம் குழந்தைகளின் பசியை ஆற்றி வந்தன. இப்போது பல குழந்தைகள் பயன் அடைந்து வருகிறார்கள்.கிராமப்புற வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள ஏராளமான குழந்தைகள் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications