சடலத்துக்கே ஷாக் தந்த "பட்டி".. சுடுகாடு எங்கே?.. இடுப்பளவு தண்ணீரில் தோளில் சுமக்கும் அவலம்
புதுக்கோட்டை அருகே சடலத்தை தோளில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது
புதுக்கோட்டை: மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், இடுப்பளவு கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே சடலங்களை தோளில் சுமந்து கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலைமை குடுமியான்மலை அருகே ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அருகே உள்ளது எழுவச்சிப்பட்டி.. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள்தான்..
அந்த ஊரில் இறப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு, சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ஒரே ஒரு மயானம் உள்ளது... ஆனால், அதற்கு செல்வதற்கு பாதை எதுவும் இல்லை.

சுடுகாடு
எனவே, கடந்த 40 வருடங்களாவே, கண்மாயை கடந்துதான் அந்த சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும்.. கருவேல காடுகள் சுற்றி உள்ள பகுதி அது.. மழைக்காலம் வந்துவிட்டால், கண்மாய் நிரம்பி வழியும்.. சடலத்தை சுமந்து கொண்டு, நீர்நிறைந்த கன்மாயை மிகுந்த சிரமங்களுக்கிடையே கடந்து சென்று, அடக்கம் செய்யும் நிலைமை உள்ளது.

சொர்க்கரதம்
கொஞ்சம் தவறினாலும், சடலம் கண்மாய் நீரில் விழுந்துவிடும்.. இப்படி முறையான சாலை வசதி இல்லாததால், அலங்கரிக்கப்பட்ட சொர்க்கரதம் வாகனங்களில் எந்த சடலத்தையும் கொண்டு போகவும் முடிவதில்லை.. அதனால் தோளில்தான் தூக்கி சுமக்க வேண்டும்.. இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் இறந்துவிட்டார்..

மயானம்
அவருக்கு 60 வயது.. உடம்பு சரியில்லாமல் உயிரிழந்த நாகராஜ் சடலத்தை, அடக்கம் செய்ய ஊர் மக்கள் திரண்டனர்.. மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால், இடுப்பளவு தண்ணீரில் தோளில் சுமந்தபடி சடலத்தை தூக்கி சென்றனர்.. இப்போது கனமழை பெய்துள்ளதால் கண்மாய் முழுக்க நீர் உள்ளது..

வேண்டுகோள்
மிகப்பெரும் அவதியோடு நடந்து சென்று 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் நாகராஜ் சடலத்தை மக்கள் அடக்கம் செய்தனர். இதை பற்றி எத்தனையோ முறை அரசுக்கும் அதிகாரிக்கும் புகார் மனு தரப்பட்டுள்ளதாம்.. மயானத்திற்கு சடலங்களை செல்ல முறையான சாலை வசதி அமைத்துத் தரவேண்டும், அல்லது சாலை வசதி உள்ள இடத்தில் மயானத்தை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றனர் எழுவச்சிப்பட்டி மக்கள்..!












Click it and Unblock the Notifications