சாப்பாடு இல்லைனு சொன்னது குத்தமா?.. ஃபுல் போதையில் லாரி ஓட்டுநர் செய்த சம்பவம்.. புனேவில் அதிர்ச்சி
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், புனேயில் லாரி ஓட்டுநர் ஒருவர் ஹோட்டலுக்குச் சென்று சாப்பாடு கேட்ட நிலையில், ஹோட்டல் க்ளோஸ் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி சாப்பாடு மற்றும் தண்ணீர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் மதுப் பிரியர்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்துவிட்டு, நானா இப்படி பண்ணினேன் என்று காலையில் எழுந்ததும் கேட்கும் சம்பவங்கள் பலவற்றை பார்த்திருப்போம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்ற பழமொழியும் உள்ளது. அந்த வகையில், புனேவில் ஹோட்டல் மூடப்பட்டதாகக் கூறிய ஹோட்டலின் மீது மதுபோதையில் லாரியை விட்டு மீண்டும் மீண்டும் மோதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் இருந்து புனேவை நோக்கி லாரி ஓட்டுநர் சுக்ராம் என்பவர் வந்துள்ளார். புனே நகருக்குள் வந்த அவர் ஹின்கன்காவ் என்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஹோட்டல் கோகுலுக்கு சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, ஹோட்டலுக்குள் சென்று சாப்பாடும், தண்ணீரும் வேண்டும் என கேட்டுள்ளார் சுக்ராம்.
இதையடுத்து, ஹோட்டலின் உள்ளே இருந்தவர்கள் வந்து ஹோட்டல் மூடப்பட்டுவிட்டதாக சுக்ராமிடம் தெரிவித்துள்ளனர். இதனால், கடும் ஆத்திரமடைந்த ஓட்டுநர் சுக்ராம் விறுவிறுவென்று சென்று லாரியில் ஏறியுள்ளார். பின்னர், லாரியில் அமர்ந்துவிட்டு வேகமாக லாரியை இயக்கிய சுக்ராம் ஹோட்டல் மீது லாரியைக் கொண்டு மோதியதால் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒருமுறை மோதிவிட்டு நிற்காமல் தொடர்ந்து பலமுறை லாரியை விட்டு மோதி ஹோட்டலை மோசமாக சேதப்படுத்தினார். இந்த மோதல் சம்பவத்தின்போது ஹோட்டல் மட்டுமல்லாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள், இரண்டு இரு சக்கர வாகனகள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன. இதனால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
லாரி ஓட்டுநரின் இந்த செயலைப் பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை நிறுத்துமாறு பலமுறை அவரிடம் கூறி சப்தமிட்டனர். ஆனால், அதற்கெல்லாம் அசராத சுக்ராம் லாரியை நிறுத்தாமல் தொடர்ந்து மோதிக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை நோக்கி கற்களை வீசத் தொடங்கினர். ஆனாலும், மோதுவதை அவர் நிறுத்தவில்லை. இந்நிலையில், இந்த மோதலின்போது லாரியின் சக்கரம் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து, உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் லாரி ஓட்டுநர் சுக்ராமை கைது செய்தனர். லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும், இதனால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹோட்டல் மூடப்பட்டதால் சாப்பாடு, தண்ணீர் இல்லை என்று கூறிய ஹோட்டல் மீது லாரியைக் கொண்டு மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications