"இப்போதே விசாரிக்காவிட்டால் வானம் இடிந்து விழுந்துவிடாது.." அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மோசடி வழக்கு தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அயோத்தி காணிக்கை திருட்டு விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த வழக்கை இப்போது உபி அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வரும் சூழலில், பல திடுக் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
அதில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. மேலும், இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கிய பின்னரே இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழக்கின் அவசரத் தன்மையைக் குறிப்பிட்ட மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இதில் உடனடியாக தலையிட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியது.
வானம் இடிந்து விழாது
மேலும், கோடை விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிப்பதால் "வானம் ஒன்றும் இடிந்து விழுந்துவிடாது" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற விடுமுறை முடிந்து வழக்கமான பணிகள் தொடங்கிய பின்னர் இந்த மனுவை பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள் தள்ளிப்போயுள்ள போதிலும், ராமர் கோயில் நன்கொடை பணம் திருடப்பட்டது தொடர்பான போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அனுகல்ப் மிஸ்ரா என்பவரது சொத்துக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். பக்தர்களின் நன்கொடை எப்படி எல்லாம் திசைதிருப்பப்பட்டது என்பதைக் கண்டறியக் குற்றவாளிகள் வங்கிக் கணக்குகள், முதலீடுகள் மற்றும் சமீபத்திய செலவுகள் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் முழுமையாகக் கண்காணித்து வருகின்றனர்.
பின்னணி
ராமர் கோயிலில் காணிக்கையாகப் பெறப்படும் ரொக்கப் பணத்தை எண்ணும் பணி தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிறுவனத்தில் தான் அனுகல்ப் மிஸ்ரா பணியாற்றினார். இந்த நிதி முறைகேட்டில் அவருக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அனுகல்ப் மிஸ்ரா தனது மைத்துனரான லவகுஷ் மிஸ்ரா என்பவரையும் இதே பணத்தை எண்ணும் குழுவில் அதே தனியார் நிறுவனம் மூலம் தந்திரமாக சேர்த்துள்ளார். இந்த வழக்கில் இவர்கள் இருவர் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திடுக் தகவல்கள்
இந்த வழக்கின் விசாரணை வேகம் பெற்றுள்ள நிலையில், அயோத்தி மாவட்டத்தில் உள்ள அனுகல்ப் மிஸ்ராவின் பூர்வீக கிராமமான பசவாவிற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது குடும்பத்தினரின் வீடு மிகவும் ஆடம்பரமாக கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இவர்களின் நிதி நிலைமை சமீபத்திய ஆண்டுகளிலேயே பல மடங்கு அதிகரித்தது என்றும் என்றும் அந்த ஊர் மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அனுகல்ப் மிஸ்ரா சமீபத்தில் கிராமத்தின் எல்லையில் ஒரு பண்ணை வீடு கட்டியதாகவும், கடந்த ஆண்டு அயோத்தியில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அந்த தகவல்களை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்த்து வருகின்றனர். மேலும், அவர் புதிதாக மகிந்திரா ஸ்கார்பியோ சொகுசு கார் ஒன்றை வாங்கத் திட்டமிட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.














Click it and Unblock the Notifications