ஜெயலலிதாவின் சேலையை இழுத்த திமுக? நிர்மலா சீதாராமனை அவரது கணவரை வைத்தே தாக்கிய ஸ்டாலின்! பரபர பேச்சு
ராமநாதபுரம்: தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து திமுகவினர் இழுத்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் அதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலடி கொடுத்தார். நிர்மலா சீதாராமனை அவரது கணவர் எழுதிய புத்தகத்தில் இருந்தே ஸ்டாலின் ‛அட்டாக்' செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடியை பேச வைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி தலைவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் இலக்கான பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார்.
முன்னதாக இந்த விவாதத்தின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர், தமிழக சட்டசபையில் திமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்ததாக கூறினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் நடக்காத ஒரு நிகழ்வை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாக கூறினர். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் ராமநாதபுரத்தில் இன்று தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறை கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கனிமொழி கூறிய பிறகு தான் நிர்மலா சீதாராமன் சிலப்பதிகாரத்தின் முன்னுரையை படிக்க ஆரம்பித்துள்ளார். அவர் முழுமையாக படிக்க வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு ஓய்வு கிடைக்கும். அதன்பிறகு கண்டிப்பாக முழுமையாக படிக்க வேண்டும்.
நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர் எழுதிய புத்தகத்தில் மீண்டும் பாஜக வந்தால் நாட்டுக்கு நல்லத இல்லை என குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில் இந்தி, சமஸ்கிருதத்தை படிக்க விடாமல் தடுத்ததாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் சேலை இழுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் சேலையை இழுத்ததாக நிர்மலா சீதாராமன் கூறும் வேளையில் மணிப்பூரில் ஆடைகளை களைந்து இழுத்து வரப்பட்ட பெண்கள் பற்றி அவருக்கு ஏன் கண்ணீர் வரவில்லை?

மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு ஒப்புக்கு ஒரு சில நிமிடம் பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் இது நிச்சயம் எதிரொலிக்கும். வடக்கே தான் அவர்கள் அதிகம் என நம்புகின்றனர். அங்கேயும் அவர்கள் செல்வாக்கை இழந்து வருகின்றனர். மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு திமுகவை விமர்சிக்கிறார்கள் என்றால் திமுக சரியாக இருப்பதாக பொருள்.
அதிமுக பாஜகவின் அடிமையாக இருக்கிறது. மாநில கட்சியாக இருந்தாலும் நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் குரல் கொடுக்கும் கட்சியாக திமுக இருக்கிறது. திமுக எம்பிக்கள் கொள்கைகளை பேசுறாங்க. பயமின்றி பேசுவது தான் பாஜகவின் பயமாக உள்ளது. அகில இந்திய கட்சிகளும் திமுகவை பின்பற்ற தொடங்கி உள்ளனர். இதனால் தான் பாஜக திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறது'' என கூறினார்.












Click it and Unblock the Notifications