காமராஜரை கொல்ல முயன்றது யார்? திமுகவில் இருந்தவர் தான் எம்ஜிஆர்! மோடிக்கு பாடமெடுத்த ஸ்டாலின்
ராமநாதபுரம்: பாஜகவில் பேசும்படியான தலைவர்கள் இல்லாததால் பிரதமர் மோடி பிற கட்சிகளின் தலைவர்களை கடன் வாங்கி பேசுகிறார். ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டு மண்ணில் பிரிவினைவாதமாக என திமுகவை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விமர்சித்த நிலையில் அதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கின. ஆனால் பிரதமர் மோடி பேசவில்லை. இதனால் பிரமதர் மோடியை பேச வைக்க நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் பேசினர். திமுக சார்பில் டிஆர் பாலு, கனிமொழி எம்பி உள்ளிட்டவர்கள் பேசினர். அப்போது பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பேசியபோது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக பிரதமர் மோடி பேசும்போது, ‛‛தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு அமைச்சர் தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்கிறார். ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் பிறந்த மண்ணை இந்தியாவில் இருந்து பிரித்து பேசுகிறார். இந்தியா என்றால் வடஇந்தியா மட்டும் தான் என்கிறார். அப்படியென்றால் தமிழ்நாடு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லையா?'' என பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலுவை விமர்சனம் செய்து இருந்தார்.
இதற்கு ராமநாதபுரத்தில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், ‛‛அமைச்சர் எவ வேலு திராவிட நாடு கேட்டவர்களாக இருந்தாலும் இன்றைக்கு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளதாக கூறினார். இந்திய ஒருமைப்பாட்டை காக்கும் பேச்சாக தான் இது இருக்கிறது. இதில் பிரிவினை எங்கு உள்ளது.

இதனை வெட்டி ஒட்டி வாட்ஸ்அப்பில் ஒரு குரூப் அனுப்ப நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் அதனை பேசியுள்ளனர். அதோடு ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் பிறந்த மண்ணில் பிரிவினைவாதமா? என பிரதமர் மோடி பேசுகிறார். திராவிட நாடு கேட்டுக்கொண்டிருந்த திமுகவில் இருந்து பிரிந்து வந்தவர் தான் எம்ஜிஆர். அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமல் திராவிடர் உடமையடா என பாடியவர் தான் எம்ஜிஆர். அதனை பிரதமர் மோடி தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் வகுப்புவாதத்தை துளியும் ஏற்காதவர் காமராஜா். டெல்லியில் அவரது வீட்டை கொளுத்த நினைத்தவர்கள் யார்? என்பதை பிரதமர் மோடி தெரிந்து கொண்டு பேச வேண்டும். சொந்த கட்சியில் உள்ள தலைவர்களை பற்றி பேச முடியாததால் தான் மாற்று கட்சி தலைவர்களை வைத்து திமுகவை பிரதமர் மோடி விமர்சனம் செய்கிறார். இது எடுபடாது. மாறாக தமிழகத்தை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிச்சயம் நிறைவேற்றி காட்டுவோம். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இந்தியா முழுக்க பரவ வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications