பரமக்குடியில் குவியும் தலைகள்.. இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி.. பைக்குகளில் வர தடை.. போலீஸ் குவிப்பு
ராமநாதபுரம்: தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் பரமக்குடி கொண்டவரப்பட்டுள்ளது. 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒப்பற்ற தலைவராக விளங்குபவர் தியாகி இம்மானுவேல் சேகரன்.. தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு சென்று, எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு சட்டப் போராட்டம் நடத்தி, அவர்கள் பக்கம் ஆதரவு தந்தவர்.

33 வயதில் படுகொலை செய்யப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன், தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய தலைவராகவே என்றென்றும் கருதப்பட்டு வருகிறார்.
குருபூஜை நிகழ்வு: அவரது நினைவாகவே, வருடந்தோறும் குரு பூஜை நிகழ்வும் நடைபெற்று வருகிறது... தமிழக அரசும் அவர் மறைந்த செப்டம்பர் 11ம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது. அதன்படி, இமானுவேல் சேகரன் நினைவுதின குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது
அந்தவகையில், சிவகங்கை மாவட்ட கலெக்டரும் விடுமுறை அறிவித்திருக்கிறார்.. இது தொடர்பாக ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள்: அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 21ம் தேதி 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வருகை தந்து மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இம்மானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, பரமக்குடி நகர் போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.. பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் தடுக்க, 150 நவீன சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், தியாகி இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வருவோர், இரு சக்கர வாகனங்களில் வரக்கூடாது என்று ஐஜி பிரேம் ஆனந்த் சின்கோ தெரிவித்துள்ளார்..
அதிகாரிகள் ஆய்வு: முன்னதாக, பரமக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென் மண்டல ஐஜி-யான பிரேம் ஆனந்த் சின்கா, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி தமிழக அரசு சார்பில் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இன்று மரியாதை செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications