ஹை அலர்ட்டில் பசும்பொன்.. முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவிற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம். அந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள், அரசியல் கட்சிகள் தலைவர்கள் என பலர் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவதுடன், அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அக்டோபர் 28 முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் ஆன்மிக விழா தொடங்கியது. அதில், வருஷாபிஷேகம், சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டன.

நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. 2ஆம் நாளான நாளான நேற்று ஏராளமான மக்கள் மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து இன்று முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழா, 61 வது குருபூஜை விழா நடைபெற இருக்கிறது. நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.
அதேபோல் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் அங்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், அன்வர் ராஜா, மணிகண்டன் உள்ளிட்டோரும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். மேலும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், சசிகலா, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்த பசும்பொன் வருகின்றனர்.
அதேபோல் கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்தும் பசும்பொன் வந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த இருக்கிறார். முக்கிய தலைவர்கள் வர இருப்பதால் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. குருபூஜைக்கு வருபவர்கள் அரசு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ள காவல்துறை, கூரைகளின் மீது அமர்ந்து வரக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications