இலங்கை அடாவடியால் கொதிப்பில் தமிழக மீனவர்கள்.. ராமேஸ்வரத்தில் 2வது நாளாக வேலை நிறுத்தம்
ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இன்று 2 வது நாளாக 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 4 ஆம் தேதி 2 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்காக அந்த 23 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, படகுகளின் டிரைவர்களாக இருந்த 2 மீனவர்களுக்கு தலா 6 மாத சிறை தண்டனையும், மற்றொரு மீனவர் 2 வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டதாக கூறி அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. மீதமுள்ள 20 மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை நீதிமன்ற உத்தரவால் ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம் மீன்பிடி டோக்கன் அலுவலகம் முன்பு நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையடுத்து, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இருந்த போதிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று 2 வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் 2 ம் நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு மீன் பிடி தொழிலை சார்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications