எத்தனை ஒபிஎஸ் வந்தாலும்.. ஓபிஎஸ் நான் தான்..! ‘தர்மத்தை’ மறக்காத ஓ.பன்னீர்செல்வம்.. என்ன சொன்னார்?
சென்னை: தன்னுடைய சின்னமான பலாப் பழத்தை கண்டறிந்து தனக்காக வாக்களித்த இராமநாதபுரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் லோக் சபா தொகுதியில் இரண்டாது முறையாக களம் காண்ட திமுக கூட்டணியிலுள்ள முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி, பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் களம் கண்டனர். தற்போது தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி ஐயூஎம்எல் கட்சியின் நவாஸ்கனி 161254 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியை எட்டினார்.

தேர்தல் ஆணையத்தின் தகவல் படி ஐயூஎம்எல் கட்சியின் நவாஸ் கனி 161254 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 495014 வாக்குகளை பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக 333760 வாக்குகள் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார். அதற்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாள் 96740 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் 94471 வாக்குகளும், பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்தியத் திருநாட்டின் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட்ட நிலையில், என்னுடைய பெயரிலேயே பல சுயேட்சைகளை நிறுத்தி என்னை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் பணியாற்றினர்.
இந்த நிலையில், என்னுடைய சுயேட்சை சின்னமாம் 'பலாப்பழம்' சின்னத்தை கண்டறிந்து இலட்சக்கணக்கான வாக்குகளை அளித்துள்ள இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் எனக்காக தேர்தல் பணியாற்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தொண்டர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக், பசும்பொன் தேசியக் கழகம், தென்னாடு மக்கள் கட்சி, தமிழர் தேசம் கட்சி / வீர முத்திரையர் சங்கம், இந்திய மக்கள் கல்வி இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப, மக்களின் தீர்ப்பிற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலை வணங்குகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உடன் பிறப்புகள் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல், எப்போதும் போல் கழகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்றும், மாண்புமிகு அம்மா அவர்களின் வழியிலான ஆட்சியினை தமிழ்நாட்டில் அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications