நொடியில் நடந்த விபரீதம்.. பூக்குழியில் தவறி விழுந்த பக்தர்.. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை அடுத்துள்ள குயவன்குடி பகுதியில் புகழ்பெற்ற சுப்பையா கோயில் உள்ளது. இங்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்ற நிலையில், அதில் பூக்குழி இறங்கிய கேசவன் என்பவர் எதிர்பாராத விதமாக அதில் விழுந்தார். அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நமது நாட்டில் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட பலரும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றக் கோரி பல விஷயங்களைச் செய்வார்கள். பூக்குழி இறங்குதல், பூச்சட்டி ஏந்துவது உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொள்வார்கள். ஆனால், சில நேரம் இதுபோல வேண்டும் போது எதிர்பாராத சம்பவங்களும் நடந்துவிடும்

அப்படியொரு சம்பவம் தான் இப்போது ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் நடந்துள்ளது. அங்கு குயவன்குடியில் பூக்குழி இறங்கியபோது நிலைதடுமாறி விழுந்த நபர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார்.
என்ன நடந்தது
அதாவது ராமநாதபுரத்தை அடுத்துள்ள குயவன்குடியில் சுப்பையா கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்குப் பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இந்தக் கோயிலில் திருவிழா நடைபெற்ற நிலையில், அதன் ஒரு பகுதியாகக் கடந்த ஏப்ரல் 10ம் தேதி பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது.. அன்றைய தினம் அதிகாலை முதல் பலரும் பூக்குழி இறங்கினர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அல்லது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதைக் கோரி பூக்குழி இறங்குவார்கள். அந்தப் பகுதியில் சுப்பையா கோயில் பூக்குழி இறங்கும் விழா ரொம்பவே பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு தரப்பு மக்களும் இதில் பங்கேற்பார்கள்.
பூக்குழியில் விழுந்த பக்தர்
அதன்படி கடந்த ஏப்ரல் 10ம் தேதி பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இதில் முதலில் பூசாரி பூக்குழி இறங்கிய நிலையில், பிறகு பக்தர்கள் வரிசையாக பூக்குழி இறங்கினர். அதன்படி வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்த கேசவன் (56) என்பவரும் பூக்குழி இறங்கினார். இருப்பினும், எதிர்பாராத விதமாக அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் கேசவன் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.
அருகே பாதுகாப்பிற்குத் தீயணைப்பு வீரர்கள் இருந்த நிலையில், அவர்கள் நொடிப்பொழுதில் கேசவனை மீட்டனர். பூக்குழியில் இருந்து பத்திரமாக வெளியே கூட்டி வந்தனர். இருப்பினும், அதற்குள் அவருக்கு மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மோசமான உடல்நிலை
இருப்பினும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றது. ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார். இது குறித்து கேசவன் மனைவி விக்னேஷ்வரி என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பதற வைக்கும் சம்பவம்
இதற்கிடையே கேசவன் பூக்குழி இறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் முதலில் ஒரு பக்தர் பூக்குழி இறங்கிய பிறகு கேசவன் வருகிறார். அவர் சாமி கும்பிட்டுவிட்டு பூக்குழியில் இறங்குகிறார். அவர் பூக்குழியில் வேகமாக நடக்க முற்படுகையில் இரண்டாவது அடி வைக்கும்போது நிலைதடுமாறினார். அதன் பிறகு சில அடி வைத்த அவர் பூக்குழியில் விழுகிறார். அருகே இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஓடிச் சென்று அவரை அழைத்து வருவது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications