முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை! அக்.30ஆம் தேதி பசும்பொன் செல்லும் டிடிவி தினகரன்! எகிறும் டென்ஷன்!
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக பசும்பொன் செல்லும் அதே நாளில் டிடிவி தினகரனும் செல்வதால் டென்ஷன் எகிறி வருகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 30ஆம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.
இதற்கான அறிவிப்பை அமமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; சுதந்திர போராட்ட வீரரும், சமுதாய சமநிலைக்காகவும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமைகளைக் களைவதற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, தேசியமும், தெய்வீகமும் தனது இரண்டு கண்களாகப் போற்றிய மாபெரும் தலைவர் 'தென்னாட்டு போஸ்' பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30.10.2023 திங்கள் கிழமை அன்று நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி தேவர் திருமகனாரின் நினைவாலயம் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று அன்றைய தினம் காலை 10 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார். இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வட்ட/வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எடப்பாடி பழனிசாமியும் அக்டோபர் 30ஆம் தேதி காலை பசும்பொன் செல்வது தான். இதனால் அதிமுக, அமமுகவினரிடையே டென்ஷன் எகிறி வருகிறது.












Click it and Unblock the Notifications