சுட்ட தேங்காயும், நீளமான குச்சியும்.. சேலத்தின் மூக்கை துளைத்த தேங்காய் சுடும் விழா.. வியப்பூட்டுதே
சேலம்: சேலம் முழுக்க "சுட்ட தேங்காய்" மணமணக்குது.. இன்று ஆடி மாதம் என்பதால், தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக நடந்துள்ளது.. இந்த பண்டிகையின் சிறப்பு என்ன தெரியுமா?
ஆடி மாதம் என்றாலே விசேஷமான மாதமாக கருதப்படுகிறது.. இந்த ஆடி மாதத்தில், அதிகமாக காற்று வீசுவதால், எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையிலான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள்.. அதனால்தான், ஆடி மாதங்களில் "கூழ்" ஊற்றுவது பிரசித்தி பெறகிறது..

ஆடி மாதம்: ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு விழா எடுத்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கமாக இருந்துவருகிறது.. குறிப்பாக சேலம், கோவை, கரூர், திருப்பூர், போன்ற கொங்கு மண்டலங்களில், ஆடி மாதம் முதல் நாளன்று, தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையை, மகாபாரதப் போருடன் தொடர்புபடுத்தப்படுகிறது.. அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில் துவங்கிய மகாபாரத போர், ஆடி மாதம் 1ம் தேதி தொடங்கி, 18 நாட்கள் நடைபெற்றதாம். இறுதியில் ஆடி-18 அன்று முடிவுக்கு வந்ததாம். அதனால்தான், தர்மயுத்தம் தொடங்கும் நாளாக ஆடி 1 கருதப்பட்டு, தேங்காய் சுடும் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. தேங்காய்களை சுட்டு அதனை பிரசாதமாக கடவுளுக்கு படைத்து வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
மகிழ்ச்சி வாழ்க்கை: அந்த வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.. புதுமண தம்பதிகள், மகிழ்ச்சியான வாழ்வினை தொடங்கவும், குடும்பத்தில் செல்வம் பெருகவும், ஆரோக்கியம் ஒற்றுமை தவழவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
அதேசமயம், தேங்காயின் மருத்துவக் குணத்தை அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த விழா கருதப்படுகிறது.. இதற்கு தேங்காய்ப் பண்டிகை என்றும் சொல்வார்கள்..
தேங்காய் கண்கள்: புதிய தேங்காயை எடுத்து அதன் மேலுள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்ப்பார்கள்... ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தேய்க்கப்பட்டதும், அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அதிலுள்ள துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் கலந்த கலவையை உள்ளே போடுவார்கள்.
நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமர குச்சியில் அந்த தேங்காயை சொருகி, குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர். பிறகு வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவார்கள்.. தமிழகத்திலேயே சேலத்தில் மட்டும்தான் இப்படி நெருப்பில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடபடுவது கூடுதல் கவனத்தை பெற்று வருகிறது.
தேங்காய் சுடும் விழா: அந்தவகையில், இன்று ஆடி மாதம் பிறந்துள்ளதால், சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் விழா சிறப்பாக நடந்தது. அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள அரசமரத்து காட்டூர் பகுதியில் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர் பொதுமக்கள். இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரும்பாலும் இந்த விழாவில், முற்றிய தேங்காயை பயன்படுத்துவார்கள்.. தேங்காய் நாரை எடுத்துவிட்டு, தேங்காய் முழுவதும் மஞ்சள் பூசி அலங்காரம் செய்வார்கள்.. அதற்கு பிறகே எள், பாசிப்பயறு, நாட்டுவெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலையை அரைத்து, தேங்காய் துளையின் வழியாக தேங்காயின் உள்ளே செலுத்துவார்கள்.
தேங்காய் தண்ணீர்: இதிலுள்ள தேங்காய் தண்ணீரை, ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்துக்கொண்டு, அந்த கலவையில் சிறிதளவு உள்ளே சேர்ப்பார்கள். அதாவது, தேங்காயின் உள்ளே, முக்கால் பாகம் பிரசாத கலவையும், கால் பங்கு தேங்காய் தண்ணீரும் இருக்குமாம்.
இந்த துளையில் பொருத்தப்படும் நீளமான குச்சிக்கும் அலங்காரம் செய்வார்கள்.. அழிஞ்சில் குச்சிகள் இதற்கு பயன்படுத்தப்படுவார்கள்.. சிலசமயம் வாதநாராயணன் குச்சிகளையும் பயன்படுத்துவார்களாம். நெருப்பில் தேங்காய் நன்றாக வெந்ததுமே, படார் என அதிலுள்ள ஓடுகள் வெடித்து, தேங்காயை சரி சமமாக இரண்டாக உடைத்து சாமிக்கு படைத்து வணங்கி பிரசாதமாக சாப்பிடுவார்கள்.
வயிறு புண்கள்: தேங்காய்க்குள் சேர்க்கும் எள்ளு, பாசிப்பயறு, நாட்டுவெல்லம், அவல், பொட்டுக்கடலையுடன், சுட்ட தேங்காயும் சேர்த்து சாப்பிடும்போது அபார ருசியாக இருக்குமாம்.. இந்த தேங்காய் உணவு வயிற்று புண்களை ஆற்றக்கூடியது.. புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவாக உள்ளதால், உடலுக்கு பலத்தை தருகிறது.. அவ்வளவு ஏன்? தேங்காய் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் அழிஞ்சில் குச்சியும், வாதநாராயணன் குச்சியுடம் மருத்துவக் குணங்கள் நிறைந்தவையாகும்.












Click it and Unblock the Notifications