சேலம் இளைஞருக்கு பிறந்த நாளே இறந்த நாளானது.. இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த போது விபரீதம்
சேலம்: சேலத்தை சேர்ந்த இளைஞருக்கு பிறந்த நாளே இறந்த நாளாகியுள்ளது. சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து அது விபரீதத்தில் முடிந்துள்ளது. பிறந்தநாளன்று சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில் நண்பர்களுடன் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
பின்னர், அவரது நெருங்கிய நண்பர்களான சுந்தர் மற்றும் கௌதம் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். இன்ப அதிர்ச்சி தருவதற்காக ரஞ்சித்குமாரை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, சாலை விபத்தில் சிக்கி ரஞ்சித்குமார் மற்றும் கௌதம் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம்
சேலம் சீலநாயக்கன்பட்டி பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் ரஞ்சித்குமாருக்கு கடந்த மார்ச் 9ம் தேதி பிறந்த நாள். வியாழக்கிழமை காலையில் அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

கல்லூரி
கல்லூரி முடிந்ததும் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டியை சேர்ந்த சங்கர் மகன் கௌதம் (19), சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர் (22) ஆகிய 2 பேருடன் ரஞ்சித் குமார் இருசக்கர வாகனத்தில் சீலநாயக்கன்பட்டியை நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிளை சுந்தர் ஓட்டினார்.

உயிருக்கு போராட்டம்
கௌதமும், ரஞ்சித்குமாரும் வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்தனர். சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற சரக்கு வாகனமும், மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேரும் பலத்த காயத்துடன் சாலையில் உயிருக்கு போராடினார்கள்.

ரஞ்சித்குமார்
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிலர், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது கல்லூரி மாணவரான ரஞ்சித்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர்.

வழக்கு பதிவு
இதனிடையே உடல் மோசம் அடைந்ததால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கௌதம் பரிதாபமாக இறந்தார். சுந்தர் பலத்த காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பெரும் சோகம்
விபத்தில் பலியான 2 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் பிறந்த நாள் கொண்டாடி இன்ப அதிர்ச்சி கொடுக்க நண்பர்கள் நினைத்தது விபரீதத்தில் முடிந்துள்ளது. இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications